புதிய ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு முன்பதிவு ஆரம்பம்!
பெரும் ஆவலைத் தூண்டியுள்ள ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக இன்று துவங்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய 7 சீட்டர் எம்பிவி காரை ரெனோ நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ட்ரைபர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புத்தம் புதிய கார் வரும் 28ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புத்தம் புதிய காருக்கு இன்று முதல் முன்பதிவு ஏற்கப்படுகிறது. ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

உருவத்தில் மினி எம்பிவியாக இருந்தாலும் இந்த கார் பல்வேறு பயன்பாடுகளுக்கு தக்கவாறு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, இதன் மூன்றாவது வரிசை இருக்கையானது சிறியவர்களுக்கானதாக இருக்கும்.

தேவையில்லாத பட்சத்தில் மிக எளிதாக இதன் மூன்றாவது வரிசை இருக்கைகளை தனியாக கழற்றி வீட்டில் வைத்துவிட முடியும். அதேபோன்று மாட்டுவதும் மிக சுலபமான வழியில் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது வரிசை இருக்கையை கழற்றினால் 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை அளிக்கும்.

ரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது புத்தம் புதிய டிசைன் அம்சங்களுடன் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 70 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், அழகான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், ஸ்கிட் பிளேட், பாடி கிளாடிங் சட்டங்கள் என மிக வசீகரமான தோற்றத்தை தருகிறது.

இந்த காரின் உட்புறமும் இந்த பட்ஜெட் கார்களில் மிக பிரிமீயமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

இந்த காரில் எல்இடி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு தனித்தனியான ஏசி வென்ட்டுகளும் உள்ளன. அதாவது, பட்ஜெட் கார்களில் மிக அதிக பிரிமீயம் வசதிகளை பெற்ற மாடலாகவும் இருக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் கார் ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. டட்சன் கோ ப்ளஸ் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். மாருதி எர்டிகா அளவுக்கு பட்ஜெட் இல்லாதவர்களுக்கு மிகச் சிறந்த 7 சீட்டர் சாய்ஸாக அமையும்.


Click it and Unblock the Notifications








