நான் வந்துட்டேன்ல... விற்பனையில் ரெனோ நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கை அளித்த ட்ரைபர்!
புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ட்ரைபர் கார் ரெனோ கார் நிறுவனத்தின் விற்பனையிலும், வர்த்தகத்திலும் முக்கிய பங்களிப்பை வழங்கி அசத்தி உள்ளது.

கடந்த மாதம் 28ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரெனோ ட்ரைபர் கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிக குறைவான விலையில் அதிக தொழில்நுட்ப சிறப்புகளுடன் வந்த 7 சீட்டர் கார் மாடல் என்பதே இதற்கு காரணம்.

இந்த நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே, ரெனோ ட்ரைபர் கார் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கிறது. கடந்த மாதம் 2,490 ரெனோ ட்ரைபர் கார்களை விற்பனை செய்துள்ளதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலமாக, அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை முதல் மாதத்திலேயே பிடித்துள்ளது. அதாவது, ரெனோ க்விட் காரைவிட சற்று அதிகம். கடந்த மாதத்தில் 2,191 ரெனோ க்விட் கார்களையும், 967 டஸ்ட்டர் எஸ்யூவிகளையும், 32 கேப்ச்சர் எஸ்யூவிகளையும், 24 லாட்ஜி கார்களையும் ரெனோ விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 6,557 கார்களை விற்பனை செய்திருந்த ரெனோ கார் நிறுவனம் கடந்த மாதம் 5,704 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது, விற்பனை 13.01 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் ரெனோ கார் நிறுவனம 3,660 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது ட்ரைபர் வருகையின் மூலமாக விற்பனை சரிவு கணிசமாக குறைந்துள்ளது. ரெனோ ட்ரைபர் இல்லையென்றால் ரெனோ கார் நிறுவனத்தின் விற்பனை ஜூலை மாதம் போலவே மிக மோசமாக இருந்திருக்கும். ட்ரைபர் வரவு ரெனோ நிறுவனத்திற்கு கை கொடுத்துள்ளது.

ரெனோ ட்ரைபர் கார் ரூ.4.95 லட்சம் முதல் ரூ.6.49 லட்சம் என்ற மிக சவாலான எக்ஸ்ஷோரூம் விலையில் ரெனோ ட்ரைபர் கார் கிடைக்கிறது. இந்த கார் க்விட் கார் கட்டமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டது.

ரெனோ ட்ரைபர் கார் 3,990 மிமீ நீளமும், 1,739 மிமீ அகலமும், 1,643 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,636 ஆக இருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த காரில் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதிகள் உள்ளன.

இந்த காரை 2 சீட்டர், 3 சீட்டர், 4 சீட்டர், 5 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய மாடல்களில் பயன்படுத்தும் வகையில், இருக்கைகளை கழற்றி மாட்டும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரை 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும்போது 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை அளிக்கிறது.

புதிய ரெனோ ட்ரைபர் காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனி ஏசி வென்ட்டுகள், கீ லெஸ் என்ட்ரி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ரெனோ ட்ரைபர் காாரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதிய ரெனோ ட்ரைபர் காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹை ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மினி எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








