ஸ்கோடா ரேபிட் பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம் வெளியானது
ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஸேக் ஹொல்லிஸ் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். அதாவது, புதிய ஸ்கோடா கார்கள் அறிமுகம் குறித்த திட்டங்களை அவர் ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டு வருகிறார். இதனால், ஸ்கோடா பிரியர்களும், ஆட்டோமொபைல் இணையதளங்களும் அவரது ட்விட்டர் பக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

புதிய ஸ்கோடா கார்கள் குறித்து அவரை பின்தொடர்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டென பதில் தந்துவிடுகிறார். அந்த வகையில், பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் குறித்து ஒருவர் வினவியுள்ளார்.

பிஎஸ்-6 ஸ்கோடா ரேபிட் காரை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அது எப்போது அறிமகமாகும்? என்று அவரிடம் கேட்டார். அதற்கு, வரும் ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஏன் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும். தற்போது பிஎஸ்-4 ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக தள்ளுபடி சலுகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது, இருப்பு இருக்கும் பிஎஸ்-4 ரேபிட் கார்களுக்கு அதிக சலுகைகளை பெறும் வாய்ப்பு இருப்பதால், உடனடியாக நீங்கள் உங்கள் முயற்சியை துவங்கலாம் என்று பதில் அளித்துள்ளார்.

தற்போது ஸ்கோடா ரேபிட் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதனிடையே, பிஎஸ்-6 ஸ்கோடா ரேபிட் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் நீக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்-6 மாடலின் விலை கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த கார் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும். மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த கட்டுமானத்தை பெற்றிருக்கும் கார் மாடலாக ஸ்கோடா ரேபிட்டை கூறலாம்.


Click it and Unblock the Notifications








