நம்ப முடியாத ஆரம்ப விலையில் ஸ்கோடா ரேபிட் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
ஸ்கோடா ரேபிட் காரின் லிமிடேட் எடிசன் மாடல் நம்ப முடியாத ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் ஸ்கோடா ரேபிட் கார் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. சிறந்த கட்டுமானம், நேர்த்தியான டிசைன், நம்பகமான எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றிருக்கிறது. இந்த காருக்கென தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் விதமாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் மிக குறைவான விலையில் புதிய லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட் ரைடர் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் ரூ.6.99 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், குறைவான விலை வேரியண்ட்டாக விற்பனையில் இருந்து வரும் ஆக்டிவ் வேரியண்ட்டைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா ரேபிட் காரின் பேஸ் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் ஆக்டிவ் வேரியண்ட் ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைத்து வந்தது. இந்த நிலையில், தற்போது வந்திருக்கும் இந்த புதிய ரைடர் வேரியண்ட் ரூ.1 லட்சம் குறைவான விலையில் வந்திருக்கிறது. இது நிச்சயம் மிட்சைஸ் செடான் கார் வாங்க விரும்புவோரை கவர்ந்திழுக்கும் விஷயமாக இருக்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் எடிசன் வேரியண்ட்டானது பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 15.41 கிமீ மைலேஜ் வழங்கும் என்று அராய் சான்றளித்துள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் ரைடர் எடிசன் மாடலில் காரின் முன்புற க்ரில் அமைப்பு, பி பில்லர் மற்றும் பூட் ரூம் மூடியில் கருப்பு வண்ணத்தில் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரமும் தனித்துவத்தை அளிக்கிறது.

இந்த காரின் உட்புறத்தில் எபோனி சாண்ட் என்ற இரட்டை வண்ணக் கலவையும் இந்த மாடலின் மதிப்பை உயர்த்துகிறது. ஐவரி வண்ண சீட் அப்ஹோல்ஸ்ட்ரியும் முக்கிய விஷயம். ஸ்கஃப் பிளேட்டுகளில் ரேபிட் பிராண்டு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் டியூவல் ஏர்பேக்குகள், எதிரொலிப்பு தன்மை இல்லாத உட்புற ரியர் வியூ மிரர், அட்ஜெஸ்ட் வசதியுடன் த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட், ரஃப் ரோடு பேக்கேஜ், எஞ்சின் இம்மொபைலைசர், டைமருடன் ரியர் டீஃபாகர் வசதிகள் உள்ளன.

ஸ்கோடா ரேபிட் ரைடர் எடிசன் வேரியண்ட்டிற்கு ஸ்கோடா ஷீல்டு பிளஸ் பேக்கேஜ் மூலமாக 24 மணிநேர அவசரகால உதவி திட்டமும், நீட்டிக்கட்டப்பட்ட வாரண்டி திட்டமும் வழங்கப்படுகிறது. இது நிச்சயம் இந்த காருக்கு கூடுதல் மதிப்பை தரும் விஷயமாக இருக்கும்.

கடந்த மாதம் வெறும் 612 ஸ்கோடா ரேபிட் கார்களை மட்டுமே விற்பனையாகின. விற்பனை குறைந்து வருவதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலை ஸ்கோடா ஆட்டோ களமிறக்கி உள்ளது. மிட்சைஸ் செடான் கார் வாங்குவோரின் கவனத்தை புதிய ஸ்கோடா ரேபிட் கார் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








