இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழகம்... சத்தமே இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி சாதித்தது இதுதான்
இந்தியாவிற்கே முன் உதாரணமான மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 4.65 லட்சம் சாலை விபத்துக்கள் அரங்கேறியிருந்தன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டில் இது 4.61 லட்சமாக குறைந்துள்ளது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் சாலை விபத்துக்கள் காரணமாக மொத்தம் 1.48 லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டில், 1.49 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்கள் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

நாட்டிலேயே சாலை விபத்துக்கள் தொடர்பான உயிரிழப்புகளில் முதலிடம் வகிப்பது உத்தரபிரதேசம்தான். உத்தரபிரதேச மாநிலத்தில் சாலை விபத்துக்கள் காரணமாக, கடந்த 2018ம் ஆண்டில் மொத்தம் 22,256 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முந்தைய 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அங்கு 2,132 பேர் அதிகம் உயிரிழந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருவது ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள் காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு மொத்தம் 12,216 பேர் உயிரிழந்துள்ளனர். 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 24.4 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 3,941 என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகள் என்கிற அளவில் பார்த்தால், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, உத்தரபிரதேசத்தில் அதிகரித்து கொண்டிருப்பதும், தமிழகத்தில் குறைந்து கொண்டிருப்பதும் தெரியவருகிறது.

கடந்த 2013ம் ஆண்டில், உத்தரபிரதேச மாநிலத்தில் 16,003 பேரும், தமிழகத்தில் 15,563 பேரும் சாலை விபத்துக்களால் உயிரிழந்திருந்தனர். சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவர்களை கட்டாயமாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகதான் தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும், சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் குறைந்துள்ளன. சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறி கொடுக்கும் மாநிலங்கள், தமிழகம் மற்றும் ஆந்திராவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சாலை பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது குஜராத் மாநிலத்தில் 685, மஹாராஷ்டிரா மாநிலத்தில் 574 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எவ்வளவு பேர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கிறார்கள் என நீங்கள் கணக்கிட்டால், இந்த பட்டியலில் ஹரியானா முதலிடம் வகிக்கிறது.

ஹரியானா மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு 20.2 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். இந்த பட்டியலில் நாகலாந்து மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சம் பேருக்கு 3.2 பேர் மட்டுமே சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 125சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து டூவீலர்களிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS- Anti-lock braking system) பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த அதிரடி உத்தரவு அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
NOTE: Images Used Are Only For Representational Purpose Only


Click it and Unblock the Notifications








