புதிய டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படம் வெளியானது!
விரைவில் வர இருக்கும் புதிய டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. இந்த காரின் ஸ்பை படம் மற்றும் தகவல்களை காணலாம்.

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு நிகரான ரகத்தில் புதிய ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. அல்ட்ராஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல், கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த மோட்டார் ஷோவில் பொது பார்வைக்கு வந்தது.

தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் வைத்து தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

புனே அருகில் பிம்ரியில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் அந்த கார் நிற்கும்போது படம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சோதனை முறையில் டாடா அல்ட்ராஸ் காரின் உற்பத்தி துவங்கிவிட்டதாக கருதப்படுகிறது. இந்த சோதனை முறையிலான உற்பத்தியில் திருப்தி ஏற்பட்டால், அடுத்தகட்டமாக அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகள் முறைப்படி துவங்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டிசைன் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். அத்துடன், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஏராளமாக இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இரண்டு எஞ்சின்களுமே 99 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் இடம்பெறும். டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கூட வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

டாடா ஹாரியர் மற்றும் விரைவில் வர இருக்கும் அதன் 7 சீட்டர் மாடலான காசினி ஆகிய எஸ்யூவி கார்களுடன் சேர்ந்து இந்த புதிய அல்ட்ராஸ் காரும் பிம்ரியில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் மாடல் அடுத்த ஆண்டு வர இருக்கிறது.
Give source: Supercharged


Click it and Unblock the Notifications








