போட்டி அதிகரித்துள்ள சூழலில் அதிரடி முடிவை எடுத்த டாடா: மேனுவல் கியர்பாக்ஸில் களமிறங்கும் அல்ட்ராஸ்?
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொண்ட கார்களை களமிறக்கி வரும் சூழ்நிலையில், டாடா நிறுவனம், அதன் அப்கமிங் மாடலான அல்ட்ராஸ் காரை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் ரக வாகன விற்பனையில் கொடிகட்டி பறந்து வரும் டாடா நிறுவனம், அண்மைக் காலங்களாக அதன் தயாரிப்புகளைப் புதுப்பிக்கும் பணியையும், அதன் கூடவே புத்தம் புதிய மாடல்களை, இந்திய நான்கு சக்கர வாகனச் சந்தையில் களமிறக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், உலகம் தரம் வாய்ந்த கார்களை உருவாக்குவதற்காக, புதிய பிளாட்பார்ம், அதீதி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளிட்டவற்றை தயாரிக்க பெருமளவில் முதலீட்டினை அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

அந்தவகையில், புதிய டிசைன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் டாடா ஹாரியர் கார், இந்தியச் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அல்ட்ராஸ் எனும் பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்திலான புதிய கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, தீபாவளி போன்ற திருவிழா நாட்களில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், டாடாவின் இந்த பிரிமியம் ஹேட்ச்பேக் ரக காரில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை டீம் பிஎச்பி இணையதளம் வெளியிட்டுள்ளது.

மாறாக டாடா நிறுவனம், அல்ட்ராஸ் மாடலை முன்னதாக மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

இந்த காரில் 7 ஸ்பீடு டிசிடி யூனிட் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தநிலையில், இதுபோன்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இந்த குறைபாட்டின் காரணமாக டாடா நிறுவனம், எவ்வாறு சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்கும் என்ற கேள்வி உருவாகியுள்ளது. அதேசமயம், முன்னதாக கூறப்பட்டு வந்த 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் புதிய அல்ட்ராஸ் வெளிவந்திருந்தால், அதுவே ஹேட்ச்பேக் ரக காரில் இந்த வசதியைப் பெறும் முதல் கார் என்ற பெருமையைச் சூடியிருக்கும்.

இந்தியாவில் தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்ட காருக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த சமயத்தில் டாடா நிறுவனம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை, அதன் அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யாது என்ற தகவல், ரசிகர்கள் மத்தியிலும், நம் அனைவரின் மத்தியிலும் குழப்பைத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாடா நிறுவனத்தின் இந்த அதிர்ச்சி முடிவிற்கு, 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் கொண்ட அல்ட்ராஸின் உற்பத்தி நிறைவடையாததே முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. ஆகையால், இந்த வேரியண்ட்டின் உற்பத்தி பூர்த்தியடைந்த பின்னர் அவை விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா ஹாரியர் மாடலும் தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இதன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் டார்க் கன்வெர்டர் வேரியண்ட் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்னதாக, இதேபோன்று டாடா அல்ட்ராஸ் கார் வெறும் டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியது குறிப்பிடத்தகுந்தது.

டாடாவின் இந்த ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸ் கார், மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாளனாக களமிறங்க இருக்கின்றது. இந்த மாடல் கார்களின் வேரியண்ட்டில் வாடிக்கையாளர்களின் விருப்ப தேர்விக்கேற்ப சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இதேபோன்று, அடுத்த வருடம் இந்தியாவில் களமிறங்க இருக்கும் ஹோண்டா ஜாஸ் காரிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கிடைக்க இருக்கின்றது. இவ்வாறு, இந்தியாவில் களமிறங்கும் பெருவாரிய வாகனங்கள், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை குறிவைத்து களமிறக்கப்பட்டு வரும்நிலையில், டாடாவின் இந்த முடிவு எத்தகைய சூழலை உருவாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டாடா நிறுவனம், அல்ட்ராஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் ரக காரில் எந்த ரகத்திலான எஞ்ஜினை வெளியிடும் என்ற தகவல் இதுவைர அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் இந்த காரில் 1.5 லிட்டர் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே எஞ்ஜின்தான் டாடா நெக்ஸான் காரில் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஆனால், அல்ட்ராஸ் மாடலில் இந்த எஞ்ஜின் 92 பிஎச்பி பவரையும், 201 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில், ட்யூன்-அப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்தே, அல்ட்ராஸின் பெட்ரோல் வேரியண்ட் எஞ்ஜின் களமிறக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications