பிஎஸ்6 அளவீட்டு கருவிகளுடன் டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு மாடலாக க்ராவிட்டாஸ் எஸ்யூவியை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. டாடா நிறுவனத்தின் தனித்துவமான மாடலாக அறிமுகமாகவுள்ள க்ராவிட்டாஸ் எஸ்யூவி 7 இருக்கைகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அறிமுகத்திற்கு எஸ்யூவி கார் பிரியர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த க்ராவிட்டாஸ் கார் மாசு உமிழ்வை அளவிடும் கருவிகளுடன் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த கார் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பிஎஸ்6 தரத்துடன் விற்பனையாகவுள்ளது.

ஹெரியர் மாடலில் உள்ள 2.0 லிட்டர் க்ரேயோடிக் டீசல் என்ஜினை தான் இந்த க்ராவிட்டாஸ் காருக்கும் டாடா நிறுவனம் வழங்கவுள்ளது. இருப்பினும் இந்த கார் 7 இருக்கை வெர்சனில் வெளியாகவுள்ளதால் என்ஜினின் வெளியிடப்படும் ஆற்றல் அதிகமாகவே இருக்கும். அதாவது ஹெரியர் கார் வெளியிடும் ஆற்றலை விட 30 பிஎச்பி அதிகமாக 173 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் அளவிற்கு ஆற்றலை, இந்த காரின் என்ஜின் வெளிப்படுத்தும்.

என்ஜினை போல ட்ரான்ஸ்மிஷன் தேர்வும் ஹெரியரில் உள்ளதை போல் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸாக வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வை வழங்கவும் டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்த கூடுதல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வு க்ராவிட்டாஸின் அறிமுகத்திற்கு சிறிது காலத்திற்கு பின்னரே வழங்கப்படவுள்ளது.

க்ராவிட்டாஸ் காரை போல் ஹெரியரின் என்ஜினையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணியிலும் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமான ஐந்து இருக்கை ஹெரியர் காரின் தயாரிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ராவிட்டாஸ் கார், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பஸ்ஸார்ட் என்கிற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7 இருக்கைகளுக்காக மூன்று வரிசைகள் க்ராவிட்டாஸ் காரில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஹெரியர் மாடலை விட 62 மிமீ நீளம் அதிகம் கொண்டுள்ளது. அதேபோல் க்ராவிட்டாஸ் கார் பின்புறம் மற்றும் பின்புற கதவுகள் போன்றவற்றின் டிசைனும் ஹெரியருடன் ஒப்பிடும்போது மிகவும் அப்டேட்டாக உள்ளது. இத்தகைய மாற்றங்கள் தவிர க்ராவிட்டாஸ் மற்றும் ஹெரியர் கார்களின் வெளிப்புற டிசைன்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் தென்படுகின்றன.

ஹெரியர் மாடலுக்கு பிறகு டாடா நிறுவனத்தின் ஒமேகா கட்டமைப்பில் உருவாகும் இரண்டாவது காராக க்ராவிட்டாஸ் கார் விளங்குகிறது. இதுமட்டுமில்லாமல் ஹெரியருக்கு பின்னர் டாடாவின் புதிய இம்பேக்ட் 2.0 என்கிற டிசைன் அமைப்பில் உருவாகும் மற்றொரு காராகவும் க்ராவிட்டாஸ் உள்ளது. டாடாவின் இந்த புதிய டிசைன் அமைப்பில் விரைவில் அட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக், அடுத்த தலைமுறைக்கான நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனத்தின் மற்றுமொரு தனித்துவமான மாடலாக அறிமுகமாகவுள்ள இந்த க்ராவிட்டாஸ் எஸ்யூவி கார் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.15 லட்சத்தில் இருந்து விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனத்தின் இந்த புதிய க்ராவிட்டஸ் எஸ்யூவி கார் அறிமுகமான பின்னர் இதன் பிரிவில் உள்ள ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மற்ற கார்களுடன் விற்பனையில் போட்டியிட வேண்டும்.


Click it and Unblock the Notifications








