ஜாகுவார் லேண்ட்ரோவர் விற்பனைக்கா? டாடா விளக்கம்!
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் விற்பனை செய்யப்பட இருப்பதாக வெளியானத் தகவலுக்கு டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு கார் தயாிப்பு நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜாகுவார் நிறுவனத்தின் கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதும், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை என்பதால், இந்த இரண்டு நிறுவனங்களையும் விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், புளூம்பெர்க் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், " எங்களது ஆட்டோமொபைல் பிரிவு நிறுவனங்கள் கடுமையான காலக்கட்டத்தை கடந்து வருகிறது. அதேநேரத்தில், கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருகிறது.

மேலும், எங்களது குழுமத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வருவாய்தான் அதிகளவு பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனவே, இந்த இக்கட்டான தருணத்தை கடந்து செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.

சிக்கன நடவடிக்கைகளையும் கையில் எடுத்துள்ளோம். வர்த்தக வாய்ப்புள்ள கார்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட எதிர்காலத்தில் வர்த்தக வாய்ப்பு அதிகமுள்ள துறைகளில் அதிக முதலீடுகளை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இக்கட்டான சூழலில் உள்ளது. ஆனால், அதன் பங்குகளை விற்பனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை. எனினும், உடன் இணைந்து பணியாற்றுவதற்கான நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக, ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்ய இருப்பதாக வெளியானத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனையில் பெரும் சரிவு இருப்பதால், அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு கார் நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தி, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதன் பிறகு, இரு நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்து, அந்நிறுவனங்களை மீட்டது டாடா மோட்டார்ஸ்.

ஆனால், நடப்பு ஆண்டு துவக்கத்திலிருந்தே கார் விற்பனையில் உள்ள சரிவு மற்றும் ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகும் நடவடிக்கைககள் காரணமாக, இந்த இரு நிறுவனங்களின் வர்த்தகமும் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனையிலும் பெரும் சரிவு இருப்பதால், அந்நிறுவனம் பல்வேறு சிக்கன மற்றும் சீர்த்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Source: Bloomberg


Click it and Unblock the Notifications








