டாடாவின் சிறிய ரக எஸ்யூவி கான்செப்ட் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம்!
ஜெனிவாவில் துவங்கி இருக்கும் சர்வதேச மோட்டார் ஷோவில் சிறிய ரக எஸ்யூவி கான்செப்ட் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறிய ரக எஸ்யூவி மாடலின் கான்செப்ட் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

எதிர்காலத்தில் வர்த்தகத்தை ஸ்திரப்படுத்துவதற்கு எஸ்யூவி மற்றும் மின்சார கார் சந்தையில் வலுவாக இருக்க வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து அதிரடி காட்டி வருகிறது. அதன்படி, புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டி வருகிறது.

இந்த நிலையில், ஜெனிவாவில் துவங்கி இருக்கும் சர்வதேச மோட்டார் ஷோவில் சிறிய ரக எஸ்யூவி கான்செப்ட் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். டாடா எச்2எக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும், இந்த கான்செப்ட் மாடலானது அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் உருவாக்கப்பட்ட அதே அல்ஃபா பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரைவிட புதிய எச்2எக்ஸ் எஸ்யூவியானது 50 மிமீ குறைவான வீல் பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட இருக்கிறது.

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் மாடலில் 1.05 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், இந்த டீசல் எஞ்சின் ஆப்ஷனின் உற்பத்தியை நிறுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹாரியர் எஸ்யூவி மாடல்களின் டிசைன் தாத்பரியங்கள் இந்த கான்செப்ட்டில் தென்படுகின்றன. இந்த புதிய எச்2எக்ஸ் எஸ்யூவி ஹார்ன்பில் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.

அடுத்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டாடா எச்2எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








