குட் நியூஸ்... இந்த ஆண்டிலேயே அறிமுகமாகிறது 7 சீட்டர் டாடா ஹாரியர்!
டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் இந்த ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி வரும் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வர இருக்கிறது. இந்த நிலையில், இதன் 7 சீட்டர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிந்ததே.

இந்த 7 சீட்டர் ஹாரியர் எஸ்யூவி இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கன்ட்டர் பட்செக் ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியின்போது உறுதி செய்துள்ளார்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலிலும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடலில் இருந்து 7 சீட்டர் மாடலை வேறுபடுத்தும் விதத்தில், டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா ஹாரியர் எஸ்யூவி மாடல்களானது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 பிளாட்ஃபார்மை தழுவிய ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடலானது 4,660 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, 5 சீட்டர் மாடலைவிட 62 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கும். ஆனால், இரண்டு மாடல்களுமே 2,741 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கும்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடலானது ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் இடையிலான ஆன்ரோடு விலையில் வர இருக்கிறது. 7 சீட்டர் மாடலானது இதைவிட கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட ஜாம்பவான் மாடல்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய பெயரிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications