புதிய மாசு உமிழ்வு விதிகள் எதிரொலி... டாடா ஹெக்ஸா கார் விடைபெறுகிறது!!
டாடா ஹெக்ஸா காருக்கு மாற்றாக புதிய 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்த ஆண்டு வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால் பல்வேறு கார் மாடல்கள் சந்தையிலிருந்து விடைபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. அதில், டாடா ஹெக்ஸா காரும் ஒன்றாக இருக்கும் என்று தெரிகிறது.

வலிமையான தோற்றம், அதிக இடவசதியுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹெக்ஸா காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. டொயோட்டா இன்னோவா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய இரு கார்களுக்கும் மாற்றுத் தேர்வாக அமைந்துள்ளது.

டாடா ஹெக்ஸா காரில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட உள்ளது. ஆனால், வர்த்தக வாகனங்களில் மட்டுமே இந்த எஞ்சினை பயன்படுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால், பயணிகள் வாகனங்களுக்கு இந்த எஞ்சின் பயன்படுத்தப்படாது. ஏனெனில், பயணிகள் வாகனங்களுக்கு மாசு உமிழ்வு தர நிர்ணயம் கடுமையான விதிகளை கொண்டுள்ளது.

இதனால், கிட்டத்தட்ட டாடா ஹெக்ஸா கார் விற்பனையில் இருந்து விலக்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனினும், டாடா ஹெக்ஸா காருக்கு பதிலாக, டாடா ஹாரியர் அடிப்படையிலான கசினி என்ற 7 சீட்டர் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்த நிலையில், புதிய பயணிகள் வாகனங்களில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளது. டாடா கசினி காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது. தவிரவும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் டாடா கசினி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அப்போது டாடா ஹெக்ஸா கார் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications