வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் இந்த காரை டாடா எப்போது அறிமுகம் செய்யும்? தகவல்கள் கசிந்தன...
இந்திய வாடிக்கையாளர்கள் விடுத்து வரும் கோரிக்கையை நிறைவேற்றும் பணிகளில் டாடா நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் எஸ்யூவி (Tata Harrier SUV) கார், கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.12.69 லட்சம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.25 லட்ச ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் 5 சீட்டர் எஸ்யூவி ரக காரான ஹாரியர் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. அது 2.0 லிட்டர் Kryotec டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி கார், லிட்டருக்கு 16.7 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் (ARAI) சான்று வழங்கியுள்ளது. இந்த சூழலில், டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஆட்டோமெட்டிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு பலர் காத்து கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஹாரியர் எஸ்யூவி காரில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி புதிய ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸானது முதலில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் யூனிட்டாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு (2020) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள டாடா ஹாரியரின் பெட்ரோல் மாடலுடன் இணைந்து இந்த ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும் பின் நாட்களில், இந்த டார்க் கன்வெர்டர் யூனிட்டிற்கு மாற்றாக ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை டாடா நிறுவனம் வழங்கும் என கூறப்படுகிறது. டாடா ஹாரியரின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலும் இந்த ட்யூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழலில் டாடா ஹாரியரின் பெட்ரோல் மாடல் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது என டாடா மோட்டார்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகுதான், ஹாரியர் காரின் ஆட்டோமெட்டிக்-பெட்ரோல் வேரியண்ட் மார்க்கெட்டிற்கு வரும் என டாடா மோட்டார்ஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக டாடா ஹாரியர் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

டாடா ஹாரியர் ஆட்டோமெட்டிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட் பற்றிய கருத்துக்கள்:
டாடா ஹாரியர் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலே இதன் ஆட்டோமெட்டிக் மற்றும் பெட்ரோல் வேரியண்ட்களை வழங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனவே டாடா ஹாரியர் கார் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறும் என டாடா மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது. ஆனால் இது தொடர்பான தகவல்களையோ அல்லது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள காலத்தையோ டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கவில்லை.

ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உடன் இணைந்து, ஹாரியர் காரின் பெட்ரோல் மாடலை அறிமுகம் செய்வது தொடர்பாக தங்களுக்கு திட்டங்கள் இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. என்றாலும் பெட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்கள் 2020ம் ஆண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








