மே மாத விற்பனையில் அசத்தல்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது டாடா ஹாரியர்
கடந்த மே மாத விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் கார்களை டாடா ஹாரியர் எஸ்யூவி வீழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் எஸ்யூவி கார் கடந்த ஜனவரி மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன் இது போட்டியிட்டு வருகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய எஸ்யூவி கார்களை காட்டிலும் டாடா நிறுவனத்தின் ஹாரியர்தான் விற்பனையில் அசத்தி கொண்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த மே மாத விற்பனையிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களை டாடா ஹாரியர் வீழ்த்தியுள்ளது. கடந்த மே மாதத்தில், டாடா நிறுவனம் 1,779 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இதே கால கட்டத்தில் மஹிந்திரா நிறுவனத்தால், 1,195 எக்ஸ்யூவி500 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது. அதே சமயம் ஜீப் காம்பஸ் கார் அதை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில்தான் விற்பனையாகியுள்ளது. கடந்த மே மாதத்தில் 977 ஜீப் காம்பஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய இரண்டு கார்களையும் டாடா ஹாரியர் ஓரளவிற்கு நல்ல வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஒமேகா (OMEGA - Optimal Modular Efficient Global Advanced) பிளாட்பார்ம் அடிப்படையில் டாடா ஹாரியர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பான கட்டுமான தரமும், பாதுகாப்பு வசதிகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. டாடா ஹாரியர் காரில், 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

ஆனால் இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த குறையை போக்கும் விதமாக, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் டாடா ஹாரியர் காரின் 7 சீட்டர் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹாரியர் காரின் 7 சீட்டர் மாடலை பஸ்ஸார்டு என்ற பெயரில், 2019 ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் டாடா நிறுவனம் வெளியிட்டது.

ஆனால் மாருதி சுஸுகி பலேனோ உள்ளிட்ட பீரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படும் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்புதான் பஸ்ஸார்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நடப்பு ஆண்டு இறுதியில் டாடா ஹாரியர் காரின் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








