டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு சிறப்பான முன்பதிவு... காத்திருப்பு காலம் நீள்கிறது!
டாடா ஹாரியர் எஸ்யூவிக்ககு மிகச் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கை கிடைத்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிக சவாலான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு சிறப்பான முன்பதிவு பெறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் முதலே டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.30,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யப்பட்டது. இதற்காக சிறப்பு திட்டங்களையும், விளம்பர முயற்சிகளையும் டாடா மோட்டார்ஸ் செய்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.12.69 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி ரக கார் களமிறக்கப்பட்டது.

இந்த சூழலில், இந்த காருக்கு மிகச் சிறப்பான முன்பதிவு எண்ணிக்கை கிடைத்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சில டீலர்களில் மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீட்டிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், டாடா எச்5எக்ஸ் என்ற பெயரிலான கான்செப்ட் மாடலாக இருந்த டாடா ஹாரியர் தற்போது சந்தைக்கு வந்துள்ளது. இது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 பிளாட்ஃபார்மின் அடிப்படையிலான டாடாவின் ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நேரடி போட்டியாளராக பார்க்கப்படும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த டாடா ஹாரியர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டும் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை. எனினும், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிசஸ்டம், 9 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை இதர முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்சம் முதல் ரூ.16.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. சென்னையில் டாப் வேரியண்ட் ரூ.19 லட்சத்தையொட்டிய ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








