டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்!
டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு எஸ்ஆர்டி கோயமுத்தூர் கூடுதல் கவர்ச்சி சேர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹாரியர் எஸ்யூவியை டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததால், டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆரம்ப விலை 13 லட்ச ரூபாய். அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 16.60 லட்ச ரூபாய் (இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்). டாடா ஹாரியர் எஸ்யூவியின் முக்கியமான ஹைலைட்களில் ஒன்று அதன் கவர்ச்சிகரமான டிசைன்தான். டாடா ஹாரியர் எஸ்யூவி ஒமேகா பிளாட்பார்ம் OMEGA (Optimal Modular Efficient Global Advanced) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி8 (D8) பிளாட்பார்ம் அடிப்படையிலானது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கும், டாடா ஹாரியருக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன. வீல் பேஸ் மற்றும் பாடி கட்டமைப்பு போன்றவற்றை அதற்கு உதாரணமாக கூறலாம். இம்பேக்ட் டிசைன் 2.0 கொள்கையில் உருவாக்கப்பட்ட முதல் டாடா வாகனம் ஹாரியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டாடா நிறுவனம் ட்யூயல்-டோன் ஹாரியரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் அதற்கு முன்பு வரை, உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று டீலர்களும், கஸ்டமைஸ் நிறுவனங்களும்தான் இந்த எஸ்யூவிக்கு ட்யூயல்-டோன் கலரை வழங்கி வந்தன.

இந்த சூழலில் எஸ்ஆர்டி கோயமுத்தூர், டாடா ஹாரியர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்துள்ளது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டை மனதில் வைத்து, டாடா ஹாரியர் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்டு டாடா ஹாரியர் எஸ்யூவி ட்யூயல் டோன் ரெட் மற்றும் பிளாக் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது கவர்ச்சிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் உள்ளது.

இந்த ஹாரியர் பாடி சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பில்லர்கள், மேற்கூரை மற்றும் விங் மிரர்கள் ஆகியவை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன. டாடா ஹாரியர் காரில், 2.0 லிட்டர் Kryotec நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதே சமயம் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் வரும் மாதங்களில் இதன் லைன் அப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் 7 சீட்டர் ஹாரியரையும் டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அனேகமாக 7 சீட்டர் ஹாரியர் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெட்ரோல் ஹாரியரையும் டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








