புதிய டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவி வருகை விபரம்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஹார்ன்பில் மினி எஸ்யூவி காரின் வருகை விபரம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு தக்கவாறு, புதிய எஸ்யூவி மாடல்களை வரிசைகட்டி அதிரடி காட்டி வருகிறது டாடா மோட்டார்ஸ். அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மினி எஸ்யூவி மாடலை களமிறக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

டாடா ஹார்ன்பில் (H2X) என்று குறிப்பிடப்படும் இந்த புதிய மினி எஸ்யூவி அடுத்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த புதிய மினி எஸ்யூவி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் டாடா கார் மாடல்கள் 4.3 மீட்டர் நீளத்திற்குள் இருக்கும். அதன்படி, இந்த புதிய மினி எஸ்யூவி 4 மீட்டர் நீளம் கொண்ட மினி எஸ்யூவி மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். அத்துடன், இந்த எஸ்யூவி மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்ககும்.

ரூ.6 லட்சத்திற்குள் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல ஹேட்ச்பேக் கார்களுக்கே இந்த எஸ்யூவி கடும் சவாலாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவி மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும். ஆனால், வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலை அடிப்படையில் போட்டியாளர்களைவிட சிறந்த தேர்வாகவும், மதிப்பு மிக்க மாடலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








