டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவியின் மின்சார மாடல் அறிமுக விபரம்!
டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவியின் மின்சார மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை காணலாம்.

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில், ஹார்ன்பில் என்ற மினி எஸ்யூவியின் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு கொண்டு வந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக குறைவான விலை மினி எஸ்யூவி மாடலாக வர இருப்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவிக்கு மிக சரி நிகரான போட்டியாக இருக்கும். இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது.

இந்த நிலையில், டாடா ஹார்ன்பில் எஸ்யூவியின் மின்சார மாடலின் உருவாக்கப் பணிகளும் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் வர இருக்கும் டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடலில் பயன்படுத்தப்பட இருக்கும் அதே பேட்டரி மற்றும் மின் மோட்டார்கள் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த மினி எஸ்யூவியின் மின்சார மாடலில் கொடுக்கப்பட இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். குயிக் சார்ஜர் வசதியும் அளிக்கப்பட இருக்கிறது.

மேலும், ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை பயன்படுத்தி இந்த காரின் பேட்டரியில் சார்ஜ் அளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடியும். அத்துடன், மொபைல்போன் மூலமாகவே, ஏசி, பவர் விண்டோ உள்ளிட்டவற்றை இயக்கும் வாய்ப்பை வழங்க இருக்கிறது.

இந்த மினி எஸ்யூவி எச்2எக்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், டால் பாய் டிசைன் கான்செப்ட் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் உட்புறம் மிக சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். மேலும், எஞ்சின் பகுதியிலும் பூட்ரூம் போல பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய டாடா ஹார்ன்பில் மின்சார கார் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்ட மினி எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Via - Gaadiwaadi


Click it and Unblock the Notifications