டாடா ஹாரியர் எஸ்யூவியின் விலை அதிரடியாக உயர்வு!
டாடா ஹாரியர் எஸ்யூவியின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான டிசைன், போட்டியாளர்களைவிட சரியான விலை போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.

குறிப்பாக, ரூ.12.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவியின் விலை ரூ.35,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை குறைவான எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் விலை ரூ.12.69 லட்சத்திலருந்து 13 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்த, எக்ஸ்எம் வேரியண்ட் விலை ரூ.13.75 லட்சத்திலிருந்து ரூ.14.06 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்டி என்ற வேரியண்ட் விலை ரூ.14.95 லட்சத்திலிருந்து ரூ.15.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்இசட் என்ற டாப் வேரியண்ட்டின் விலை ரூ.16.21 லட்சத்திலிருந்து ரூ.16.56 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர வேரியண்ட்டுகளின் விலை ரூ.31,000 வரையிலும், டாப் வேரியண்ட்டின் விலை ரூ.35,000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 5 பேர் செல்வதற்கான சிறப்பான இடவசதியை அளிக்கிறது. இதுவரை வந்த டாடா கார்களில் சிறப்பான கட்டமைப்பு தரம் உயர்ந்த மாடலாகவும் விளங்குகிறது. இந்த எஸ்யூவியானது 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், இந்திய சாலைகளை எதிர்கொள்வதற்கு சிறப்பான மாடலாகவும் உள்ளது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் எச்ஐடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள் வெளிப்புறத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

உட்புறத்தில் 8.80 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளட்டர், ஸ்பிளிட் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதியத டாடா ஹாரியர் எஸ்யூவியானது லேண்ட்ரோவரின் டி8 பிளாட்ஃபார்மின் அடிப்படையிலான மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 என்ற புதிய கொள்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியானது கேலிஸ்டோ காப்பர், தெர்மிஸ்டோ கோல்டு, ஏரியல் சில்வர், டெலிஸ்ட்டோ க்ரே, ஆர்கஸ் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. அனைத்து விதத்திலும் சிறந்த தேர்வாக இருக்கிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அச்சப்படாமல் ஹாரியர் எஸ்யூவியின் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி உள்ளது. இருப்பினும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக கருதி, இந்த விலை உயர்வை டாடா மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








