சரவெடி வெடிக்க போகும் இந்தியாவின் டாடா.. புதிய எலெக்ட்ரிக் காரில் எவ்வளவு கிமீ பயணிக்கலாம் தெரியுமா?
இந்தியாவின் டாடா நிறுவனம் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டில் களமிறக்கி சரவெடி வெடிக்க போகிறது. இதில், டிகோர் எலெக்ட்ரிக் காரின் அதிக ரேஞ்ச் வெர்ஷனும் அடக்கம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் அவ்வளவு பிரமாதமாக இல்லை. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எலெக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் குறைவாக இருப்பதால், மக்கள் மத்தியில் ஒருவித தயக்கம் நிலவி வருகிறது. எனவே அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார வாகனங்களை விற்பனைக்கு களமிறக்க பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டுள்ளன. ஆனால் இதில் ஹூண்டாய் முந்தி கொண்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 452 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் என்றால், அது ஹூண்டாய் கோனாதான்.

ஹூண்டாய் கோனா தவிர இந்திய மார்க்கெட்டில் இன்னும் ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் கிடைத்து வருகின்றன. இதில், டாடா டிகோர் (Tata Tigor) எலெக்ட்ரிக் கார் முக்கியமானது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் விலை சமீபத்தில் 80 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்ததே இதற்கு காரணம்.

தற்போதைய நிலையில் 11.58 லட்ச ரூபாய் முதல் 11.92 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மும்பை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் இந்த பணம் உங்களிடம் இருந்தாலும் கூட டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை உங்களால் வாங்க முடியாது!

ஆம், தற்போதைய நிலையில் வாடகை கார் நிறுவனங்களுக்கு மட்டுமே டாடா நிறுவனம் டிகோர் எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. அத்துடன் இஇஎஸ்எல் டெண்டரின் ஒரு பகுதியாக அரசு அமைப்புகளுக்கும் டாடா நிறுவனம் டிகோர் எலெக்ட்ரிக் கார்களை வழங்கி வருகிறது. ஆனால் தனிநபர் பயன்பாட்டு சந்தைக்கு டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் இன்னும் கொண்டு வரப்படவில்லை.

இந்த சூழலில் டிகோர் எலெக்ட்ரிக் காரின் அதிக ரேஞ்ச் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அதனை தனிநபர் பயன்பாட்டு சந்தைக்கும் கொண்டு வர டாடா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது நடந்தால் அனைவராலும் இந்த காரை வாங்க முடியும்.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் தற்போதைய மாடலில் 16.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 142 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்க முடியும். எனினும் புதிய வெர்ஷனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தற்போதைய மாடலை போல் அல்லாமல் இந்த சக்திவாய்ந்த புதிய வெர்ஷன் அனைவருக்கும் விற்பனைக்கு கிடைக்கும். டிகோர் காரின் தற்போதைய மாடல் மோட்டார் 4,500 ஆர்பிஎம்மில் 40 பிஎச்பி பவரையும், 2,500 ஆர்பிஎம்மில் 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டிசி 15 kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இதன் பேட்டரியை வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

ஆனால் ஸ்டாண்டர்டு ஏசி ஹோம்/ஆபீஸ் வால் சாக்கெட்டை பயன்படுத்தினால் இதே அளவிற்கு சார்ஜ் ஏற சுமார் 6 மணி நேரம் வரை ஆகும். இந்த சூழலில் டாடா டிகோர் காரின் புதிய வெர்ஷன் அதிக ரேஞ்ச் கொண்டது என்பதால், நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக இருக்கும். டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் தற்போதைய மாடலின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் மட்டுமே.

எனினும் புதிதாக வரவுள்ள வெர்ஷனின் டாப் ஸ்பீடு இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கார்அண்ட் பைக் தளம் செய்தி வெளியட்டுள்ளது. டிகோர் எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாது வேறு சில எலெக்ட்ரிக் கார் பணிகளையும் டாடா நிறுவனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், டியாகோ எலெக்ட்ரிக், எச்2எக்ஸ் எலெக்ட்ரிக், நெக்ஸான் எலெக்ட்ரிக் மற்றும் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. இதில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் வரும் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் இதன் விலை 15 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தெரிகிறது. இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் அடுத்தடுத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டில் களமிறக்கி சரவெடி வெடிக்க காத்திருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








