நெக்ஸானுடன் எலெக்ட்ரிக் கார் சந்தையில் இறங்கி அடிக்கப்போகும் டாடா மோட்டார்ஸ்!
நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மூலமாக எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் அதிரடியாக களமிறங்கி உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவில் மட்டும் தடுமாறி வருகிறது. ஆனால், அசத்தலான டிசைன் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் மனதில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மின்சார கார் மார்க்கெட்டின் யுகம் துவங்க இருக்கும் இந்த வேளையில், முன்கூட்டியே இந்த சந்தையில் வலுவான அடித்தளத்தை போட்டுவிடும் முனைப்பில் பல்வேறு திட்டங்களுடன் இறங்கி அடிக்க இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

அதாவது, வரும் ஜனவரியில் நெக்ஸான் காரின் மின்சார மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதாவது, தினசரி அலுவலகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும் என்பது தெரிகிறது. அதிக ரேஞ்ச் இருப்பதுடன், எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் குறைவான விலை தேர்வாகவும் இருக்கப் போகிறது.

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. இவை ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ரூ.23.71 லட்சத்தில் கிடைக்கிறது. விரைவில் வரும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு ரூ.22 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மீது வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக ஆவல் எழுந்துள்ளது. பிற மாடல்களை காட்டிலும் சிறப்பான ரேஞ்ச், தொழில்நுட்ப அம்சங்களுடன் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் என்பதால், விலை அறிவிப்பை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும், நெக்ஸான் விற்பனைக்கு வலு சேர்க்கும் விதத்தில், நாடு முழுவதும் 300 விரைவாக சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த 300 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

இதில், ஏற்கனவே 50 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாம். மீதமுள்ள 250 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவை செயல்பாட்டுக்கு வந்தால், டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்கள் நிம்மதியான பயண அனுபவத்தை நகர்ப்புறத்தில் பெற முடியும்.

நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு வலு சேர்க்கும் விதத்தில், தனது குழுமத்தில் செயல்பட்டு வரும் க்ரோமா மின்னணு சாதன விற்பனை மையங்கள், டாடா ஆட்டோகாம்ப், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களும் இணைந்து செயலாற்ற உள்ளன.

அதாவது, சார்ஜ் கட்டமைப்பு நிலையங்களை ஏற்படுத்துவதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் இந்த டாடா குழும நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸுக்கு துணை புரிய உள்ளன. டாடா நிறுவனத்தின் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான டாடா ஆட்டோகாம்ப், குவாக்ஸுவான் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பேட்டரி தொழில்நுட்ப உருவாக்கப் பணிகளை செய்யும். அதேபோன்று, ஃபாஸ்ட் சார்ஜர் கட்டமைப்பு சாதனங்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிரைட்டியம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தயாரிக்க டாடா ஆட்டோகாம்ப் திட்டமிட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சமாக 129 பிஎஸ் பவரையும்,254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இது நிச்சயம் அதிக செயல்திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக இந்திய மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

சாதாரண வீட்டு சார்ஜர் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஆனால், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 60 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற நம்பலாம்.
Source: Business Standard


Click it and Unblock the Notifications








