ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு: முழு விபரம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் படங்கள், முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஸ்கேட்போர்டு ஆர்க்கிடெக்ச்சர் என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியானது இரண்டு ஆக்சில்களுக்கு மத்தியில் தரைத்தளத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், பேட்டரி காருக்கு சிறப்பான எடை விரவல் தன்மையையும், புவியீர்ப்பு விசைக்கு இணக்கமாகவும் இருக்கும் என்பதால், அதிக நிலைத்தன்மையையும் வழங்கும்.

டாடா நெக்ஸான் பெட்ரோல், டீசல் மாடல்களிலிருந்து இந்த புதிய மின்சார மாடலை வேறுபடுத்தும் விதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெ்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், பம்பர் அமைப்பு ஆகியவை மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. பனி விளக்குகள் அறையும் மாற்றம் கண்டுள்ளதுடன், பக்கவாட்டில் நீல வண்ணத்திலான அலங்கார பாகத்துடன் கவர்கிறது.

மேலும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும் விதத்தில், பேனல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் புத்தம் புதிய 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் எம்ஆர்எஃப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரின் உட்புறமும் மிக கவர்ச்சியாக இருக்கிறது. வெளிப்புற வண்ணத்தையும், அலங்கா பாகங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில், உட்புறத்திலும் சில அலங்கார வேலைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கியர் லிவருக்கு பதிலாக டிரைவர் செலக்டர் மற்றும் பெரிய ஸ்டோரேஜ் பகுதியுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் உள்ளது. கனெக்டெட் கார் தொழில்நுட்பமும், ஸ்மார்ட்ஃபோன் செயலியை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளன. இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரில் இருப்பது போன்ற செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. அனலாக் ஸ்பீடோமீட்டரும், பல்வேறு தகவல்களை பெறுவதற்கான மின்னணு திரையும் உள்ளது.

இந்த காரில் பிரிமீயம் லெதர் இருக்கைகள், முழுமையான ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டியூவல் டோன் வண்ணத் தேர்வுகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பேட்டரி, மின் மோட்டார் மற்றும் இசியூ ஆகியவற்றை இணைந்து செயலாற்ற உதவும் ஸிப்ட்ரான் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது பேட்டரி மற்றும் மின் மோட்டார் மூலமாக மின் இழப்பை தவிர்த்து, சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக பயண தூரத்தை உறுதி செய்யும்.

இந்த காரில் 30.2 kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஐபி67 என்ற நீர் மற்றும் தூசுத் தடுப்பு உறை அமைப்புக்கு இணையான தரத்தை பெற்றிருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்த காரில் இருக்கும் லிக்யூடு கூல்டு பர்மனென்ட் மேக்னெட் ஏசி மோட்டார் அதிகபட்சமாக 129 எச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காருக்கு 15A திறன் வாய்ந்த சாதாரண வீட்டு சார்ஜர் வழங்கப்படும். இந்த சார்ஜர் மூலமாக பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணிநேரம் வரை பிடிக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கும் உரிமையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த விஷயமாக இருக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு நாளை முதல் முன்பதிவு துவங்குகிறது. ரூ.21,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி - மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications