டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்!
முதல்முறையாக டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார மாடலின் ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை காணலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார கார் மாடல்களை உருவாக்குவதில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் மின்சார மாடலை தனிநபர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

மேலும், விரைவில் அறிமுகமாக இருக்கும் அல்ட்ராஸ் மற்றும் ஹார்ன்பில் மினி எஸ்யூவியின் மின்சார மாடல்கள் வருவதும் உறுதியாகிவிட்டன. இந்த நிலையில், தனது வெற்றிகரமான நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார மாடலையும் டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படத்தின்படி, தயாரிப்பு நிலைக்கு உகந்ததாக நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் காட்சி தருகிறது. முன்புறத்தில் ரேடியேட்டர் க்ரில் அமைப்பு இல்லாமல் பேனல் மூலமாக மறைத்து வடிவமைக்கப்பட்டு இருப்பதன் மூலமாக இது உறுதியாகி இருக்கிறது.

இது நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புரோட்டோடைப் மாடலாகவும், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கருதப்படுகிறது. விரைவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த காரில் இடம்பெற இருக்கும் பேட்டரி மற்றும் மின் மோட்டார் குறித்த விபரங்கள் இல்லை. எனினும், அந்த நிறுவனத்தின் சிஇஓ கன்ட்டெர் பட்செக் கூறியதுபோல, இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ முதல் 230 கிமீ வரை செல்லும் திறனை வழங்கும்.

மேலும், டாடா நெக்ஸான் கார் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையான மாடலாக இருந்து வரும் நிலையில், அதன் மின்சார மாடல் உருவாக்கப் பணிகளும் தீவிரமாக நடந்து வருவது தெரிய வந்துள்ளது. மிக விரைவில் இந்த காரின் முக்கிய விபரங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் மாடலை களமிறக்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2020ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது..

மேலும், ஹூண்டாய் கோனா, எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி மாடல்களைவிட விலை குறைவாக இருக்கும் என்பதுடன், இதன் டிசைன், சிறப்பம்சங்கள் இந்தியர்களை கவர்ந்துள்ளதால், நிச்சயம் மின்சார மாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.
Source:Teambhp


Click it and Unblock the Notifications








