டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி!
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் நகரங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் அடிப்படையில் மின்சார மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அறிமுகமாக இருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் காரும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலாக இருப்பதால், இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் 17ந் தேதி இந்த புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டாடா நெக்ஸான் கார் முதல்கட்டமாக நாட்டின் சில முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறதாம். அதாவது, சென்னை, பெங்களூர், மும்பை, தானே, நவி மும்பை, புனே, ஆமதாபாத், டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை உள்பட மேலே குறிப்பிட்ட நகரங்களில் செயல்படும் டீலர்களில் உள்ள பணியாளர்களுக்கு இந்த கார் குறித்து பயிற்சி அளித்து வருவதாகவும், இந்த நகரங்களில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் விற்பனையை அதிகரிக்கும் பணிகளை தொடங்கிய பின்னரே, நாட்டின் பிற நகரங்களிலும் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை படிப்படியாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ஸிப்ட்ரான் என்ற மின் மோட்டார் மற்றும் பேட்டரி அடங்கிய ஆற்றல் மையம் இடம்பெற்றுள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும். இதன் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்குவதற்கு டாடா திட்டமிட்டுள்ளது.

எஸ்யூவி மார்க்கெட்டில் மிக விலை குறைவான எலெக்ட்ரிக் கார் தேர்வாக இருக்கும். வரும் ஜனவரி முதல் மார்ச் இடையிலான அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

புதிய டாடா நெக்ஸானஅ கார் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.17 லட்சம் வரையிலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட விலை குறைவான தேர்வாக இருக்கும். இதற்கு போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Source: AutoCarIndia


Click it and Unblock the Notifications








