பாதுகாப்பான காரை கூடுதலாக சிறப்பித்த டாடா : டியாகோ மாடலின் புதிய அப்டேட் விபரம்!
டாடா நிறுவனம், அதன் டியாகோ காரின் என்ஆர்ஜி வெர்ஷனில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் அம்சத்தை கூடுதலாக இணைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா நிறுவனம், அதன் டியாகோ வரிசையை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்ப அப்டேட் செய்து அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில், அதன் டியாகோ என்ஆர்ஜி வெர்ஷனை மேலும் சிறிய அப்டேட்டிற்கு உட்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த க்ராஸோவர்-ஹேட்ச்பேக் மாடலான டாடா டியாகோ, இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக இருக்கின்றது.

இதன்காரணமாக, டாடா நிறுவனம், டியாகோ காரில் ஆட்டோமேடிக் ஏஎம்டி அம்சத்தை புதிதாக இணைத்து அறிமுகம் செய்துள்ளது. ஆகையால், டாடா டியாகோ என்ஆர்ஜி வெர்ஷன் தற்போது ஏஎம்டி ஆட்டோமேடிக் அம்சத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இந்த அம்சமானது, பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

இந்த புதிய ஏஎம்டி ஆட்டோமேடிக் வெர்ஷனான டாடா டியாகோ சிங்கிள் ட்ரிம் லெவலில், ரூ. 6.15 லட்சம் என்ற விலையில் கிடைக்க இருக்கின்றது. இது முந்தைய மாடலின் விலையைக் காட்டிலும் ரூ. 45 ஆயிரம் அதிகமாக காணப்படுகிறது. அதேசமயம், இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

டாடா டியாகோவின் டீசல் எஞ்ஜின் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். மிக விரைவில் புதிய பாதுகாப்பு விதி அமலுக்கு வரவிருப்பதால், டாடா நிறுவனம் சிறிய ரகத்திலான டீசல் எஞ்ஜின் கார்களை விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதன்காரணமாகவே, தற்போது பெட்ரோல் வெரியண்டில் மட்டும் இந்த ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடாவின் இந்த டியாகோவில் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. ஆகையால், டாடா டியாகாவில் முன்னதாக பொருத்தப்பட்டிருந்த அதே எஞ்ஜின்கள்தான் தற்போதும் இடம் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில், 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனிலும், 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனிலும் இந்த டியாகோ கார் கிடைக்கின்றது.

இதில், பெட்ரோல் எஞ்ஜின், 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன்கொண்டது. அதேபோன்று, டீசல் வேரியண்ட் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கின்றது. இந்த இரண்டு எஞ்ஜின்களும் மல்டி டிரைவ் மோட்களான சிட்டி மற்றும் ஈகோ தரத்தில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

டாடா டியாகோ வரிசையில் டியாகோ என்ஆர்ஜி வேரியண்ட்தான் அதிகம் சிறப்பம்சம் கொண்ட மாடலாக இருக்கின்றது. அவ்வாறு, அண்மையில் டாடா நிறுவனம், இந்த காரில் சில பாதுகாப்பு அம்சங்களை கூடுதலாக அப்டேட் செய்தது. அந்தவகையில், ஸ்டாண்டர்டு பாதுகாப்பு வசதிகளை கூடுதலாக வழங்கியுள்ளது.

அவ்வாறு, டியாகோ காரின் முன் பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன், ஸ்பீட் அலர்ட் மற்றும் சீட் பெல்ட் அலர்ட் உள்ளிட்ட வசதிகளும் இணைக்கப்பட்டன. இந்நிலையில்தான், இந்த காருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








