டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் இடம்பெறும் அசத்தல் வசதி!
டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் அசத்தலான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. அதிக சிறப்பம்சங்கள், போட்டியாளர்களைவிட விலை குறைவு போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. இந்த நிலையில், புதிய மாடல்களின் வரவால் இந்த இரண்டு கார்களின் விற்பனை சரிந்து வருகிறது.

இதையடுத்து, இந்த கார்களில் புதிய அம்சங்களை கொடுத்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு கார்களின் எக்ஸ்இசட் ப்ளஸ் (மேனுவல் கியர்பாக்ஸ்) மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் (ஏஎம்டி கியர்பாக்ஸ்) ஆகிய டாப் வேரியண்ட்டுகளில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட இருக்கிறது.

இதர வேரியண்ட்டுகளில் வழக்கம்போல் சாதாரண அனலாக் மானிகள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் தொடர்ந்து தக்கவைக்கப்படும். புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் நடுப்பகுதியில் காரின் வேகத்தை காட்டும் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் ஆர்பிஎம் அளவை காட்டும் பகுதியும், வலது பக்கமாக எரிபொருள் அளவை காட்டும் பகுதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ஸட்டரில் எஞ்சினின் சூடு அளவை காட்டும் டெம்ப்ரெச்சர் கேஜ், கடிகாரம், கதவு திறப்பதை எச்சரிக்கும் வசதி, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்ககும் என்ற விபரங்களையும் பெறும் வாய்ப்பை வழங்கும். இதன் ரகத்திலான மாடல்களில் முதல்முறையாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் இரண்டு கார்களும் வருகின்றன.

டாடா டியாகோ மற்றும் டிகோர் டாப் வேரியண்ட்டுகளில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்களின் டாப் வேரியண்ட்டில் 15 அங்குல அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பவர் ஃபோல்டிங் மிரர்கள் உள்ளிட்ட இதர வசதிகளும் இந்த டாப் வேரியண்ட்டில் உண்டு.

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கின்றன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இதில், பெட்ரோல் எஞ்சின் மட்டுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிகிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த இரு கார்களுமே டிசைன், வசதிகள், பாதுகாப்பு மற்றும் விலை என அனைத்திலும் நிறைவை தரும் கார் மாடல்களாக பெயர் பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








