நாளை அறிமுகமாகவுள்ள டாடா டியாகோ விஸ் எடிசனின் புதிய டீசர் வெளியானது...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபலமான கார்களில் ஸ்பெஷல் எடிசன்களை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது டாடா டியோகோவின் அடுத்த எடிசனான விஸ் ஸ்பெஷல் எடிசன் நாளை அறிமுகமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த காரின் புதிய டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. டியாகோ காரின் விஸ் எடிசன் வெளியாவது இதுதான் முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டிலேயே கருப்பு-சிவப்பு நிறத்தில் அறிமுகமாகியிருந்தது.
அதன்பின் இந்த ஆண்டில் வெளியாகியிருந்த விஸ் எடிசனில் கருப்பு நிறத்துடன் டைட்டானியம் க்ரே என்ற விசேஷ கலர் சேர்க்கப்பட்டிருந்தது. நாளை அறிமுகமாகவுள்ள டியாகோ விஸ் ஸ்பெஷல் எடிசனில் ஆரஞ்ச் நிறம் மற்றும் கருப்பு வண்ணக் கலவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரஞ்ச் கலர், விஸ் ஸ்பெஷல் எடிசனில் க்ரில் பகுதியில் முக்கோண டிசைனிலும், ஒஆர்விஎம்மின் மேல்புறத்திலும், அலாய் சக்கரங்களின் விசேஷ வண்ண அலங்காரம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை வெளியாகியுள்ள புதிய புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.
மேலும், டாடா டியாகோ விஸ் ஸ்பெஷல் எடிசனில், சக்கரங்களில் ஒரு பகுதி ஆரஞ்ச் நிறத்தை தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்திற்கும் அப்டேட்டாக சாம்பல் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அப்டேட் ஏற்கனவே டாடா என்ஆர்ஜியில் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த எடிசனின் சில வேரியண்ட் கார்களுக்கு மட்டும் தான் இந்த ஆரஞ்ச் கலர் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் இந்த ஆரஞ்ச் நிறம், இருக்கைகளை மூடியுள்ள ஃபேப்ரிக் துணிகளில் தையல் வேலைப்பாடுகளுடனும்,கியர் ஷிஃப்ட்டில் பெஸிலிலும், ஏர் வென்ட்டுகளிலும், சென்டர் ஏர் விண்ட் ரிங்கிலும் மற்றும் கிரானைட் கருப்பு நிறத்தில் உள்ள கதவுகளின் உட்புற கைப்பிடிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

விஸ் ஸ்பெஷல் எடிசனில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டுள்ளது. இந்த என்ஜின் 84 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 23.84 கிலோமீட்டர் செல்லும் திறனுடையது. இக்காரில் டீசல் என்ஜின் கொடுக்கப்படவில்லை.
டாடா டியாகோ விஸ் ஸ்பெஷல் எடிசன், சரிவை நோக்கி செல்லும் டாடா நிறுவனத்தின் விற்பனை நிலவரத்தை உயர்த்துவதற்காக மட்டுமல்லாமல், தற்சமயம் பிஎஸ்-6 வகை கார்கள் மட்டுமே விற்பனையாகும் என்ற கருத்தையும் உடைத்தெறிவதற்காக பிஎஸ்4 வகையை சேர்ந்த இந்த கார் அறிமுகமாகிறது.

2020ல் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸானின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களையும் அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது. இந்த புதிய வெர்சன்கள் வெளிப்புறத்தில் மட்டும் அப்டேட்களை கொண்டில்லாமல், பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
மேலும் 2020ல் அறிமுகமாகவுள்ள டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களில் மட்டும் தான் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுமாம், அதனுடன் சேர்த்து தற்போது அந்த மாடல் கார்களில் உள்ள பிஎஸ்4 என்ஜினை பிஎஸ்6 என்ஜினாக மாற்றும் திட்டம் டாடா நிறுவனத்திடம் இல்லையாம்.

அதேசமயம் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டுடன் சேர்த்து நெக்ஸானின் தற்போதைய மாடல் காரிலும் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இதற்கு காரணம், டியாகோ மற்றும் டிகோர் கார்களில் வெறும் 10 சதவீதம் மட்டும் தான் டீசல் வகை கார்கள் விற்கப்படுகிறது, ஆனால் நெக்ஸானில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் நெக்ஸானின் டீசல் வகையை தான் விரும்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications








