உலகையே கலக்கும் நிறுவனத்துடன் டாடா கைகோர்க்க காரணம் இதுதான்... இனி இந்தியா மாறப்போகிறது...
உலகையே கலக்கும் நிறுவனத்துடன், இந்தியாவின் டாடா நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டை பொறுத்தவரை, அமெரிக்கா, சீனா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேற்கண்ட நாடுகள் சிறுத்தை பாய்ச்சலில் முன்னேறி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டோ ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் நிலைமை மெல்ல மெல்ல மாற தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம் என்றார். சொன்னதுடன் நிற்காமல் அதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டார். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ததன் காரணமாக, இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பிற்கு, எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக மாற வேண்டுமெனில், அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன்கள் தேவை. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ், ஆஸ்திரேலியாவின் ட்ரைடியம் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக, ட்ரைடியம் நிறுவனத்தின் வீஃபில்-ஆர்டி 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டு வர டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் டாடா நிறுவனம் முன்னணியில் இருப்பதை இந்த 'டீல்' உறுதி செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், ட்ரைடியம் நிறுவனம் தனது டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை 26 நாடுகளில் இன்ஸ்டால் செய்துள்ளது. ஐயோனிட்டி (IONITY) நெட்வொர்க்கிற்கு, தனது வீஃபில்-பிகே ஹெச்பிசி சிஸ்டமை சப்ளை செய்யும் மிக முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், கடந்த 2018ம் ஆண்டு ஐரோப்பாவில், ட்ரைடியம் நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியது.

ஐரோப்பா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஹைபவர் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க வேண்டும் என்பதற்காக பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, டெய்ம்லர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டதுதான் இந்த ஐயோனிட்டி நெட்வொர்க் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வீஃபில்-ஆர்டி 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் வீஃபில்-பிகே ஹைபவர் சார்ஜிங் ஸ்டேஷன் என்ற 2 வகையான சார்ஜிங் ஸ்டேஷன்களை ட்ரைடியம் நிறுவனம் வழங்குகிறது. இதில், வீஃபில்-ஆர்டி 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ''ஸ்லிம்'' ஆகவும், கனகச்சிதமான அளவிலும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது பொது இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் தேவை என நினைப்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

இதனை இன்ஸ்டால் செய்வதற்கான செலவும் மிகவும் குறைவுதான். அதே சமயம் வீஃபில்-பிகே ஹைபவர் சார்ஜிங் சிஸ்டமாக திகழ்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ஏற்றதாக இது கருதப்படுகிறது. இதனிடையே இந்த பார்ட்னர்ஷிப் மூலமாக, வீஃபில்-ஆர்டி 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களை, டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது.

இதன்படி 2,700 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவிற்கு அவசியமான ஒன்றாக உள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்தால், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைந்து, நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவேதான் அனைத்து நாடுகளும் போட்டி போட்டு கொண்டு வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.
NOTE: Images Used Are Only For Representational Purpose Only


Click it and Unblock the Notifications








