டெஸ்லா சைபர்டிரக் மின்சார வாகனத்திற்கு கூரையை பிய்த்துக் கொட்டும் புக்கிங்!
அறிமுகம் செய்யப்பட்டு மூன்றே நாட்களில் டெஸ்லா சைபர் டிரக்கிற்கு முன்பதிவு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டி வருகிறது. உலக ஆட்டோமொபைல் துறையையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்த புதிய செய்தி குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் உலக அளவில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் பிராண்டாக உள்ளது. டிசைன், செயல்திறன், தொழில்நுட்பத்தில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களுக்கு நிகரான வேறு எந்த மாடல்களும் இதுவரை சந்தைக்கு வரவில்லை. டெஸ்லாவை குறிவைத்து உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் திட்டங்களை கையில் எடுத்து தீவிரமாக செயலாற்றி வருகின்றன.

இந்த சூழலில், வினோதமான டிசைனில் புதிய எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை டெஸ்லா மூன்று தினங்களுக்கு முன் அமெரிக்காவில் வைத்து அறிமுகம் செய்தது. இந்த டிரக்கின் டிசைன் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இதன் சிறப்பம்சங்கள் பெரிதும் கவர்ந்தன.

டெஸ்லா சைபர்டிரக் என்ற பெயரில் வந்த பிக்கப் டிரக் மாடலில் குண்டு துளைக்காத ஜன்னல் கண்ணாடிகள், வலிமையான கட்டமைப்பு, அதிக பாரம் சுமக்கும் திறன், நீண்ட தூரம் பயணிக்கும் வாய்ப்பு என இந்த எலெக்ட்ரிக் டிரக்கின் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல் உலகை திரும்பி பார்க்க வைத்தது.

இந்த சூழலில், டெஸ்லா சைபர்டிரக்கிற்கு திரும்ப பெறும் உத்தரவாதத்துடன் 100 டாலர்கள் முன்பணத்துடன் ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு முதல் 48 மணிநேரத்தில் மட்டும் 1.46 லட்சம் முன்பதிவுகளை குவித்தது. இந்த நிலையில், முதல் மூன்று நாட்களில் மட்டும் 1.87 லட்சம் முன்பதிவுகளை இந்த சைபர்டிரக் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 48 மணிநேரத்தில் கிடைத்த 1.46 லட்சம் முன்பதிவுகளில் டெஸ்லா சைபர்டிரக்கின் இரண்டு மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு 42 சதவீதத்தினரும், மூன்று மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு 41 சதவீதத்தினரும், ஒற்றை மின் மோட்டார் பொருத்தப்பட்ட மாடலுக்கு 17 சதவீதத்தினரும் முன்பதிவு செய்துள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதில், ஒற்றை மின் மோட்டார் பொருத்தப்பட்ட மாடலில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 402 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 482 கிமீ தூரம் செல்லாம்.

மூன்று மின் மோட்டார்கள் கொண்ட மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது 804 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

ஒற்றை மின் மோட்டார் கொண்ட மாடலுக்கு இந்திய மதிப்பில் ரூ.29 லட்சத்திலும், இரட்டை மின் மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு இந்திய மதிப்பில் ரூ.36 லட்சமும், மூன்று மின் மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு ரூ.50 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








