புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அட்டகாசமான 7 வசதிகள்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டி மாடல்களில் இல்லாத பல கூடுதல் வசதிகளுடன் பிரிமீயம் மாடலாக வர இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புரொஜெக்டர் ஹெட்லைட்
புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் முதல்முறையாக புரொஜெக்டர் க்ளஸ்ட்டர் அமைப்புடன் கூடிய பனி விளக்குகள் கொடுக்கப்பட இருக்கின்றன. சாதாரண பனி விளக்குகளைவிட இது மிக துல்லியமாக வெளிச்சத்தை பாய்ச்சுவதுடன், அதிக பிரகாசத்தை வழங்கும்.

இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்
இந்த காரில் 8 அங்குல அளவிலான உயர் துல்லிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்வதுடன், புளூலிங்க் விசேஷ தொழில்நுட்ப அம்சத்துடன் வர இருக்கிறது.

புளூலிங்க் தொழில்நுட்பம்
இணைய வசதியை நேரடியாக பெறும் விதத்தில், சிம் கார்டு பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. இதன்மூலமாக, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் வாடிக்கையாளர்கள் பெற முடியும். நேவிகேஷன் வசதி, குறிப்பிட்ட இடத்தைவிட்டு கார் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட 33 விதமான வசதிகளை இந்த புளூலிங்க் தொழில்நுட்ப சாதனம் வழங்கும்.

காற்று சுத்திகரிப்பு வசதி
இந்த காரின் ஏசி சிஸ்டத்தில் கூடுதலாக விசேஷ தானியங்கி காற்று சுத்திகரிப்பு வசதியும் சேர்க்கப்பட இருக்கிறது. காற்று மாசுபாடு அதிகம் உள்ள மெட்ரோ நகரங்களில் இந்த வடிகட்டி அமைப்பு மூலமாக காருக்குள் பயணிப்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும். மேலும், ஏசியிலிருந்து கெட்ட வாடை வருவதை தவிர்க்கும் விசேஷ பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜர்
புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் இருப்பது போலவே, இந்த புதிய வெனியூ எஸ்யூவியிலும் வயர்லெஸ் சார்ஜர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, மொபைல்போன்களை மிக எளிதாக சார்ஜ் செய்ய முடியும். அதேநேரத்தில், உங்களது மொபைல்போனிலும் வயர்லெஸ் சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்ப வசதி இருத்தல் அவசியம்.

அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம்
புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் அர்கமிஸ் நிறுவனத்தின் விசேஷ மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. காரின் உட்புற வடிமைப்பு, இடவசதி போன்றவற்றை மனதில் வைத்து மிக விசேஷமாக இந்த மியூசிக் சிஸ்டத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளது அர்கமிஸ் நிறுவனம். இதனால், மிகச் சிறந்த ஒலி தரத்தை பயணிகள் உணர முடியும்.

புதிய பெட்ரோல் எஞ்சின்
புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியில் புத்தம் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன், டியூவல் க்ளட்ச் ஆட்டடோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மிக விரைவான செயல்திறனையும், அதிர்வுகள் குறைவான கியர் மாற்ற அனுபவத்தை தரும்.

கடும் போட்டி
புதிய ஹூண்டாய் வெனியூ காரின் டிசைன், சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்டவை போட்டியாளர்களான மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








