டொயோட்டா - சுஸுகி கூட்டணியில் விற்பனைக்கு வரும் முதல் கார் குறித்து புதிய தகவல்கள் வெளியானது...
டொயோட்டா - சுஸுகி கூட்டணியில் விற்பனைக்கு வரவுள்ள முதல் கார் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய 2 ஜாம்பவான்களின் கூட்டணியில் வெளிவரவுள்ள முதல் தயாரிப்பு க்ளான்சா (Glanza) பீரிமியம் ஹேட்ச்பேக். வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள க்ளான்சா, வரும் ஜூன் 6ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த சூழலில் க்ளான்சா பீரிமியம் ஹேட்ச்பேக் காருக்கான முன்பதிவை ஒரு சில டொயோட்டா டீலர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தொடங்கி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் என்ற முன்பணத்துடன் முன்பதிவு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ ஹேட்ச்பேக் கார்தான் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு க்ளான்சா என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் டொயோட்டா க்ளான்சா கார் கிடைக்கும். இதில், 1.2 லிட்டர் கே12சி ட்யூயல் ஜெட் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜி வழங்கப்படவுள்ளது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான இந்த இன்ஜின்தான் மாருதி சுஸுகி பலேனோ காரிலும் இடம்பெற்றுள்ளது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

இதுதவிர 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் டொயோட்டா க்ளான்சா பெறவுள்ளது. இதுவும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையானதுதான். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. வி மற்றும் ஜி என இரண்டு ட்ரிம் லெவல்களில் டொயோட்டா க்ளான்சா கார் கிடைக்கும். க்ளான்சா வி எம்டி (MT - Manual Transmission) மாடல் ஒரு லிட்டருக்கு 21.01 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்.

அதே சமயம் ஜி எம்டி ஸ்மார்ட் ஹைபிரிட் மாடல் ஒரு லிட்டருக்கு 23.87 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும். இது அராய் சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். அதே நேரத்தில் சிவிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 19.56 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியது.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

வசதிகளை பொறுத்தவரை, ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் உடன் கூடிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

இதுதவிர நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் கமாண்ட்ஸ், மல்டி-ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகளும் டொயோட்டா க்ளான்சா காரில் இடம்பெறவுள்ளன. அத்துடன் பயணிகளின் பாதுகாப்பிற்கும் டொயோட்டா க்ளான்சா காரில் பல்வேறு வசதிகள் வழங்கப்படவுள்ளன.

இதில், முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட் மற்றும் ரிவர்ஸ் கேமரா ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. 3 ஆண்டுகள்/1 லட்சம் கிலோ மீட்டர்கள் ஸ்டாண்டர்டு வாரண்டியுடன் க்ளான்சா விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன், ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களுடன் டொயோட்டா க்ளான்சா ஹேட்ச்பேக் போட்டியிடவுள்ளது.


Click it and Unblock the Notifications








