டொயோட்டா சிஎச்ஆர் க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!
அட்டகாசமான டொயோட்டா சிஎச்ஆர் க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் C-HR எஸ்யூவி மாடலானது க்ராஸ்ஓவர் ரக டிசைனில் மிக வசீகரமான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியை இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது டொயோட்டா கார் நிறுவனம். இதன் ஸ்பை படங்களை ரஷ்லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கேம்ரி மற்றும் பிரையஸ் கார்களை போலவே, இந்த புதிய டொயோட்டா சிஎச்ஆர் காரில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது. இந்த காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்த ஹைப்ரிட் மாடலானது 122 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் விற்பனையில் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 145 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆனால், இந்த பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் எஸ்யூவியானது டொயோட்டா நிறுவனத்தின் புதிய டிஎன்ஜிஏ கட்டமைப்பு கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி 4,360 மிமீ நீளமும், 1,795 மிமீ அகலமும், 1,565 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 18 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், ரியர் ரூஃப் ஸ்பாய்லர், மிக பிரம்மாண்டமான பம்பர் அமைப்புடன் இந்த கார் மிக தனித்துவமான ஸ்டைலில் வசீகரிக்கிறது.

உட்புறம் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன் சாஃப்ட் டச் மெட்டீரியல்களும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இதனால், மிக பிரிமீயமாக இருக்கிறது. டேஷ்போர்டில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட்செய்யும்.

இதர சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் மிக சிறப்பான கார் மாடலாக இருக்கிறது. இந்த காரின் மிக தனித்துவமான டிசைன் மற்றும் பிரிமீயமான அம்சங்கள் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

புதிய டொயோட்டா சிஎச்ஆர் எஸ்யூவியானது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








