அட்டகாசமான அம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடல்!
டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் மிரட்டலான டிஆர்டி ஸ்போர்ட்டிவோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வருகிறது. ஆளுமையானத் தோற்றம், அதிக வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் என இந்தியர்களை வசியம் செய்து வைத்திருக்கிறது.

இந்த நிலையில், கூடுதல் கவர்ச்சிகரமான அம்சங்கள் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ மாடலானது நாளை மறுதினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டொயோட்டா கார்களை பந்தய கார்கள் போல மாற்றங்களை செய்து தரும் வடிவமைப்பு பிரிவாக செயல்படும் டொயோட்டா ரேஸிங் டிபார்ட்மென்ட் (TRD) பயன்படுத்தும் சில தொழில்நுட்ப மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் இந்த கார் வர இருக்கிறது. ஆனால், எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.

புதிய க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்பு முகப்பிற்கு முத்தாய்ப்பான விஷயமாக இருக்கும். புதிய அலாய் வீல்கள், ரெயின் வைசர்கள், அதாவது, தோற்றத்தில் கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கும். கருப்பு மற்றும் சிவப்பு வண்ண பாகங்களுடன் அலங்காரம், புதிய வண்ணத்திலான அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

கடந்த மாதமே பெங்களூரில் வைத்து இந்த புதிய மாடலானது டீலர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. டீலர்கள் அதிக ஆர்வம் தெரிவித்ததால், இந்த கார் உடனடியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடலில் 2.8 லிட்டர் ஜிடி டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயனப்டுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் எதிர்பார்க்கலாம்.

இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாடல் விற்பனையில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பபட இருப்பதாக தெரிகிறது. ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








