டொயோட்டா க்ளான்ஸா காருக்கு சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் அறிவிப்பு
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டொயோட்டா க்ளான்ஸா காருக்கு சிறப்பு கடன் மற்றும் சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆண்டு கடைசியையொட்டி க்ளான்ஸா கார் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு இந்த புதிய சேமிப்புச் சலுகைகளை டொயோட்டா அறிவித்துள்ளது. இதன்படி, க்ளான்ஸா காரின் ஆன்ரோடு விலையில் 100 சதவீத கடன் உதவி திட்டம் மற்றும் வெறும் 7.99 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடன் திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இதுதவிர்த்து, க்ளான்ஸா காருக்கு 5 ஆண்டுகள் அல்லது 2.2 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி திட்டத்தையும் டொயோட்டா வழங்குகிறது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கான சிறப்பு பராமரிப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய க்ளான்ஸா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் முன்பணம் மிக குறைவாக இருந்தாலும் எளிதாக பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவீனம் குறித்த அச்சத்தையும் போக்கும் விதத்தில் இந்த சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலான டொயோட்டா க்ளான்ஸா விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. டொயோட்டா பிராண்டின் மீதான நம்பிக்கையும் இந்த காருக்கு வலு சேர்க்கிறது.

இந்த கார் 5 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன.

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், கீ லெஸ் என்ட்ரி, சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

டொயோட்டா க்ளான்ஸா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய டொயோட்டா க்ளான்ஸா கார் ரூ.6.98 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








