மாருதி காரை விட மிகவும் குறைவான விலையில் களமிறங்கிய டொயோட்டா கார்... இளம் தலைமுறைக்கு குறி
மாருதி சுஸுகி பலேனோ காரை விட மிகவும் குறைவான விலையில் டொயோட்டா க்ளான்சா பீரிமியம் ஹேட்ச்பேக் கார் களமிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் விற்பனைக்கு வந்துள்ள முதல் கார் டொயோட்டா க்ளான்சா. மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனான டொயோட்டா க்ளான்சா, சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டொயோட்டா க்ளான்சா மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆகிய இரண்டு கார்களும் ஒரே பிளாட்பார்மை பகிர்ந்து கொண்டுள்ளன. இரண்டு மாடல்களுக்கும் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. அத்துடன் குஜராத்தில் உள்ள சுஸுகி ஆலையில்தான் இரண்டு மாடல்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு ஒற்றுமைகள் இருந்தாலும் கூட, டொயோட்டாவின் சிறப்பான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் மூலமாக க்ளான்சா வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா க்ளான்சா காரின் எக்ஸ்ட்ரீயர் மாருதி சுஸுகி பலேனோவை போலவேதான் உள்ளன. ஆனால் டொயோட்டா க்ளான்சா காரின் முன் பக்க க்ரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் முன் மற்றும் பின் பகுதிகளில், தனித்துவமான டொயோட்டா பேட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா க்ளான்சா கார், எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்களை பெற்றுள்ளது. இதில், 16 இன்ச் இரண்டு டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்டீரியர் என எடுத்து கொண்டால், டிரைவர், பயணிகளுக்கு சௌகரியமாக பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் வசதிகளுடன் கூடிய 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் டொயோட்டா க்ளான்சா காரில் கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் இருக்கையை மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

கீ லெஸ் என்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகளையும் க்ளான்சா பெற்றுள்ளது. இபிடி உடனான ஏபிஎஸ் மற்றும் முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

டொயோட்டா க்ளான்சா கார் ஜி மற்றும் வி என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், மொத்தம் ஜி எம்டி (மேனுவல் டிரான்ஸ்மிஷன்), வி எம்டி, ஜி சிவிடி (சிவிடி டிரான்ஸ்மிஷன்) மற்றும் வி சிவிடி என 4 நான்கு ட்ரிம்கள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா க்ளான்சா காரில், இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இரண்டுமே வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்க கூடிய வகையில் உள்ளது.

டொயோட்டா க்ளான்சா காரின் ஜி வேரியண்ட், 1.2 லிட்டர், கே12என் இன்ஜினை பெற்றுள்ளது. இதில், மைல்டு ஹைப்ரிட் டெக்னாலஜி வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

அதே சமயம் வி வேரியண்ட்டில், 1.2 லிட்டர் கே12எம் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டொயோட்டா க்ளான்சா காரின் விலை விபரம்:
1. ஜி எம்டி ஸ்மார்ட் ஹைப்ரிட் - ரூ.7.22 லட்சம்.
2. ஜி சிவிடி - ரூ.8.30 லட்சம்.
3. வி எம்டி - ரூ.7.58 லட்சம்.
4. வி சிவிடி - ரூ.8.90 லட்சம்.
(இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்)

வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக மாருதி சுஸுகி பலேனோவை காட்டிலும் குறைவான அறிமுக விலையில் டொயோட்டா க்ளான்சா களமிறக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி பலேனோவை காட்டிலும் டொயோட்டா க்ளான்சாவின் விலை 72 ஆயிரம் ரூபாய் வரை குறைவு.

இந்த சூழலில் டொயோட்டா க்ளான்சா காரின் அதிகாரப்பூர்வ டிவிசி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக இளம் தலைமுறையினரை டொயோட்டா நிறுவனம் குறிவைத்துள்ளது. அந்த டிவிசியை நீங்கள் கீழே காணலாம்.
ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுஸுகி பலேனோ உள்ளிட்ட கார்களுடன் டொயோட்டா க்ளான்சா போட்டியிடவுள்ளது. மாருதி சுஸுகி பலேனோவை காட்டிலும் மற்றொரு விஷயத்திலும் டொயோட்டா க்ளான்சா முந்தி செல்கிறது.

பலேனோ காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் 2 ஆண்டுகள் மற்றும் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டியை மட்டுமே வழங்குகிறது. ஆனால் டொயோட்டா நிறுவனம் க்ளான்சா காருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 1 லட்சம் கிலோ மீட்டர் வாரண்டியை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








