மராஸ்ஸா, எர்டிகா தொட முடியாத உயரத்தில் பறக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா!
கடந்த ஆண்டு புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரும், புதிய தலைமுறை மாருதி எர்டிகா காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
டிசம்பர் மாதத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கான முன்பதிவு வெகுவாக உயர்ந்தது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் தன்னிகரில்லா கார் மாடலாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் வலம் வருகிறது. புதிய போட்டியாளர்கள் வந்தாலும், இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டில் எந்த தொய்வும் இல்லாமல் வலுவான சந்தையை பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தின்போது புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரும், அதைத்தொடர்ந்து நவம்பரில் புதிய தலைமுறை மாருதி எர்டிகா காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டு கார்களால் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு நெருக்கடி ஏற்படும் என்று கருதப்பட்ட்து.

ஆனால், அந்த கணிப்புகளை பொய்யாக்கி கடந்த டிசம்பரில் வழக்கத்தைவிட அதிக முன்பதிவுகளை வாரி சுருட்டி இருக்கிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார். ஆம். கடந்த டிசம்பரில் 11,200 முன்பதிவுகளை பெற்றிருக்கிறது.

அதாவது, கடந்த டிசம்பரில் முன்பதிவு செய்யப்பட்ட டொயாோட்டா இன்னோவா கார்களின் வர்த்தக மதிப்பு ரூ.2,200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் புதிய போட்டியாளர்கள் வந்தாலும், டொயோட்டா நிறுவனம் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அதிக ஆஃபர்களை வழங்கியதும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இது ஒரு காரணமாக இருந்தாலும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் இருக்கும் ஆதரவு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பழைய தலைமுறை மாடலைவிட அதிக விலை வித்தியாசத்தில் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், அசத்தலான டிசைன், சிறந்த இடவசதி, அதிக தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றுடன் சொகுசு காருக்கு நிகரான அம்சங்களுடன் வாடிக்கையைாளர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. அதிலும், அலுங்கல் குலுங்கல் இல்லாத பயணம் இந்த காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

மேலும், பழைய மாடலில் இருந்த சக்தி குறைவான எஞ்சினுக்கு பதிலாக அதிக சக்திவாய்ந்த புதிய எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கிடைக்கும் 2. 4 லிட்டர் எஞ்சின்அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மற்றொரு 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 174 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. தவிர்தது, பெட்ரோல் மாடலிலும், 2.8 லிட்டர் டீசல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 7 பேர் மற்றும் 8 பேர் செல்வதற்க்கான இருக்கை வசதிகளில் கிடைக்கிறது. இதில், 7 சீட்டர் மாடலில் நடுவில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன. இது அடிக்கடி வெளியூர் செல்லும் வர்த்தகர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.

மேலும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன், பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது. இதனால், இந்தியர்களின் ஃபேவரிட் எம்பிவி கார் மாடலாக தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications








