டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்!
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிய பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்கள் மற்றும் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் விபரங்களை பார்க்கலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தற்போது ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட்எக்ஸ் மற்றும் டூரிங் ஸ்போர்ட் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைத்து வருகிறது. இந்த வேரியண்ட்டுகள் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களிலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த சூழலில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரியர்களின் கனவை நனவாக்கும் விதத்தில், விலை குறைவான புதிய பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு வர இருப்பது குறித்த செய்தி டீம் பிஎச்பி தளம் மூலம் தெரிய வந்துள்ளது

டீலருக்கு அனுப்பப்பட்டிருக்கும் புரோஷரில் இடம்பெற்றிருக்கும் வேரியண்ட் பட்டியலில் ஜி ப்ளஸ் என்ற புதிய பேஸ் வேரியண்ட் சேர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வேரியண்ட் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

தற்போது ஜிஎக்ஸ் என்ற வேரியண்ட்தான் பேஸ் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஜி பிளஸ் வேரியண்ட் அதனை விட மிக குறைவான விலையில் வந்திருப்பது இன்னோவா க்ரிஸ்ட்டா பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஜி ப்ளஸ் 7 சீட்டர் வேரியண்ட்டானது ரூ.15.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 8 சீட்டர் மாடல் ரூ.15.62 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டிருக்கும் வசதிகள் மற்றும் இதர ஆக்சஸெரீகளின் விபரம் குறித்த தகவல் இல்லை. எனினும், ஹாலஜன் ஹெட்லைட்டுகள், ஏசி சிஸ்டம், பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் ஆகியவை இந்த மாடலின் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

இந்த மாடலில் இடம்பெற்றிருக்கும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரையே வாங்க வேண்டும் என்ற கனவுடன் பட்ஜெட் பிரச்னையில் இருப்பவர்களுக்கு இந்த புதிய ஜி ப்ளஸ் வேரியண்ட் சிறந்த தேர்வாக அமையும். இந்த புதிய வேரியண்ட் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








