டொயோட்டா கார்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம்!
புதிய டொயோட்டா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா நிறுவனத்தின் கடன் பிரிவு வழியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 'தட்கல் லோன்' என்ற பெயரில் இந்த திட்டத்தை டொயோட்டா குறிப்பிடுகிறது. இந்த திட்டத்தின்படி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிக எளிதான, விரைவான கடன் திட்டத்தை பெற முடியும்.

புதிய டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அடுத்த 30 நிமிடங்களில் கடனுக்கு அனுமதி வழங்கப்படும். அதாவது, வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சிபில் ஸ்கோர் அடிப்படையில் இந்த கடன் உடனடியாக அனுமதிக்கப்படும்.

தட்கல் கடன் திட்டத்தின் மூலமாக காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் அதிகபட்சமாக 85 சதவீதம் வரை கடன் பெற முடியும். காருக்கான மீதமுள்ள தொகையை முன்தொகையாக செலுத்த வேண்டியிருக்கும். இதனால், கார் கடனுக்காக காத்திருக்கும் கால விரயம் குறையும்.

புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே டொயோட்டா கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் இந்த தட்கல் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் வாய்ப்பும் உள்ளது.

பழைய டொயோட்டா கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமாக வீடு இருத்தல் அவசியம் என்பதுடன், அவர்கள் தனி நபர் பயன்பாட்டிற்காக வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரின் நிழற்படம், இருப்பிடச் சான்று, சொந்தமாக வீடு இருப்பதற்கான ஆவணங்கள், அடையாள அட்டை, வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவை தேவைப்படும். இந்த கடன் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

டொயோட்டா லிவா, எட்டியோஸ், க்ளான்ஸா, யாரிஸ் மற்றும் இன்னோவா ஆகிய கார்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை அருகிலுள்ள டொயோட்டா டீலர்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








