அனைத்து ரகத்திலும் மின்சார கார்கள்: டொயோட்டாவின் அதிரடி திட்டம்!
அனைத்து ரகத்திலும் புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்வதற்கான மாபெரும் திட்டத்துடன் டொயோட்டா நிறுவனம் செயலாற்றி வருகிறது.

அடுத்த தசாப்தம் என்பது மின்சார கார்களுக்கான யுகம் துவங்குவதாகவே இருக்கும். இதனால், புதிய மின்சார கார்களை களமிறக்குவதில் அனைத்து கார் நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டொயோட்டாவும் புதிய மின்சார கார்களை களமிறக்குவதற்கு அதிரடி திட்டங்களுடன் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டிலிருந்து வரும் 2025ம் ஆண்டிற்குள் 10 புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. அதாவது, தற்போது வெவ்வேறு ரகத்தில் விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக புதிய மின்சார கார்களை களமிறக்க உள்ளது.

தனது பேட்டரி எலெக்ட்ரிக் வெஹிக்கிள் (BEV) என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த கார்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, டொயோட்டா சிஎச்-ஆர் காரின் மின்சார மாடல் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, டொயோட்டாவின் பல முன்னணி கார்களின் மின்சார மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அனைத்து மாடல்களும் 2025ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற சிறிய மின்சார கார் முதல் அனைத்து ரகத்திலும் வர இருக்கின்றன. டொயோட்டாவின் உலகளாவிய கட்டமைப்பு கொள்கையின் கீழ் தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் கார்களின் அடிப்படையில் இந்த புதிய மின்சார கார்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
மொத்தம் 6 ரகத்தில் புதிய மின்சார கார்களை டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில், காம்பேக்ட் ரகத்திலான சிறிய கார்களை டொயோட்டாவின் டைகட்சூ பிராண்டும், சுஸுகி நிறுவனமும் இணைந்து உருவாக்க இருக்கின்றது.

எனவே, டொயோட்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். மேலும், சிறிய வகை கார்கள் டொயோட்டா மட்டுமின்றி, அதன் கூட்டணி நிறுவனமான மாருதி சுஸுகி பிராண்டிலும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








