ஆகஸ்ட் 20, 21, 22... நீங்கள் தீவிர கார் ரசிகர் என்றால் இந்த தேதிகளை காலண்டரில் குறித்து கொள்ளுங்கள்!
இந்திய கார் மார்க்கெட் தற்போது வரலாறு காணாத ஒரு சரிவை சந்தித்து வருகிறது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையும் கடந்த சில மாதங்களாக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் இந்திய கார் மார்க்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும் என முன்னணி நிறுவனங்கள் நினைக்கின்றன.

எனவே அதற்கு தயாராகும் வகையில், பல புதிய மாடல்களை வரும் ஆகஸ்ட் மாதத்தில் கார் நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த கார்கள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கியா செல்டோஸ்:
இந்திய மார்க்கெட் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கார் இதுதான். தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் கார் இது. எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கியா செல்டோஸ், வரும் ஆகஸ்ட் 22ம் தேதி இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு ஏற்கனவே இந்தியா முழுவதும் முன்பதிவு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கியா மோட்டார் நிறுவனத்தை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. கியா செல்டோஸ் எஸ்யூவியில் எக்கச்சக்கமான வசதிகள் இடம்பெறவுள்ளன. இதில், பல வசதிகள் செக்மெண்ட் ஃபர்ஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

கியா செல்டோஸ் எஸ்யூவி காரில், 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இவை அனைத்து வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும். கியா செல்டோஸ் எஸ்யூவியில் மொத்தம் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6
இந்த பட்டியலின் இரண்டாவது கார் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவி. மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ள பீரிமியம் 6 சீட்டர் எம்பிவி மாடலான இது எர்டிகா அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவி கார் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து முன்பதிவுகள் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த புத்தம் புதிய 6 சீட்டர் எக்ஸ்எல்6 எம்பிவி, மாருதி சுஸுகி நெக்ஸா டீலர்ஷிப்கள் வாயிலாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே பல முறை வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவி காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் இந்த இன்ஜின் இருக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
அடுத்த தலைமுறை கிராண்ட் ஐ10 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதை ஹூண்டாய் உறுதி செய்துள்ளது. 2019 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 இந்திய மார்க்கெட்டில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக்கை பெறும் முதல் மார்க்கெட்டாக இந்தியாதான் இருக்கப்போகிறது.

புதிய கிராண்ட் ஐ10 காரில் ஏராளமான டிசைன் அப்டேட்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பல்வேறு புதிய வசதிகள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில், புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய சப்-4 மீட்டர் எம்பிவி காரான ட்ரைபரை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ரெனால்ட் வெளியிடவில்லை. எனினும் ஆகஸ்ட் மாத கடைசியில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள க்விட் ஹேட்ச்பேக்கின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ட்ரைபரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எம்பிவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இதுதவிர வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய கார் மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் களமிறங்க உள்ளன. தற்போது விற்பனையில் உள்ள மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான கார்களும் மார்க்கெட்டில் களமிறங்கவுள்ளன.


Click it and Unblock the Notifications








