இந்தியாவில் களமிறங்கவுள்ள எம்ஜி மோட்டார்ஸின் 4 மீட்டர் எஸ்யூவி கார்கள் இவைதான்...
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்த வருடத்தின் துவக்கத்தில் ஹெக்டர் எஸ்யூவியின் மூலம் இந்திய மார்க்கெட்டில் காலடி எடுத்து வைத்தது. இதன் ஹெக்டர் மாடல் இந்திய மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாக, எம்ஜி நிறுவனம் வாடிக்கையாளர்கள் இடையே நாளுக்கு நாள் பிரபலமாகி கொண்டே வருகிறது.

இதனால் இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை அடுத்தடுத்தாக வருங்காலங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் வாகனமாக எம்ஜி இ-இசட்எஸ் மாடல் அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளது.

இந்திய சாலைக்கு ஏற்ற விதத்தில் மாற்றப்பட்டு இந்த எலக்ட்ரிக் கார் அடுத்த மாதத்தில் அறிமுகமானாலும் இதன் விலை அதிகாரப்பூர்வமாக அடுத்த ஆண்டில் தான் அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுவிடும் என்றே தெரிகிறது. ஹூண்டாய் கோனா இவி காருக்கு போட்டியாக அறிமுகமாகவுள்ள இந்த கார் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி காருடனும் விற்பனையில் போட்டியிட வேண்டும்.

சிங்கிள் சார்ஜில் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கக்கூடிய இந்த எம்ஜி இ-இசட்எஸ் காரின் டாப் வேரியண்ட்கள் மட்டும் தான் முதலில் வெளியாகவுள்ளது. விலை குறைவான வேரியண்ட்கள் இதன் அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு பின்னரே வெளியாகவுள்ளதாம்.

இந்த எலக்ட்ரிக் காருக்கு அடுத்ததாக எம்ஜி நிறுவனத்தில் இருந்து பிஓஜூன் ஆர்எஸ்-3 என பெயர் கொண்ட சீன எஸ்யூவி ஒன்று இந்திய ஸ்டைலில் மாற்றப்பட்டு அறிமுகமாகவுள்ளது. அங்கு சமீபத்தில் அறிமுகமான இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளையும் கொண்டுள்ளது.

5 இருக்கை வெர்சன் மாடலான இந்த ஆர்எஸ்-3 கார், இந்தியா உள்பட வெளிநாட்டு சந்தைகளில் 7 இருக்கை வெர்சனாக அறிமுகமாகவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் வெளியாகவுள்ள டாடா கிராவிடாஸ் மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கும் எம்ஜி ஆர்எஸ்-3 இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 இருக்கை வெர்சனுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகும் எம்ஜி-ன் இந்த 7 இருக்கை வெர்சன் கார், அதனுடன் ஒப்பிடும்போது வெளிப்புறத்தில் மிக சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களை கொண்டதாக இருக்கும். மற்றப்படி என்ஜின் உள்ளிட்ட காரின் இயக்கத்திற்கான தொழிற்நுட்பங்கள் அனைத்தும் இரண்டிற்கும் ஒன்றே.

இவற்றுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 போன்ற கார்களுடன் சந்தையில் போட்டியிடுவதற்காக மிக அதிகமான எடையில் மாக்ஸஸ் டி90 என்ற ஃபுல்-சைஸ் எஸ்யூவி மாடலையும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் ஏடபிள்யூடி வெர்சனில் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அனைத்து விதங்களிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தான் அனைத்து வகையான கார் பிரிவிலும் தனது கார்களை வருங்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதிலும் குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவை தான் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகமாக்க குறி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








