போனியாகலை... அமியோ காருக்கு கல்தா கொடுக்க ஃபோக்ஸ்வேகன் முடிவு!
ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் இந்திய சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹேட்ச்பேக் கார் அடிப்படையில் உருவாக்கப்படும் காம்பேக்ட் ரக செடான் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்து வருகிறது. குறிப்பாக, மாருதி டிசையர் காரின் விற்பனை பல முன்னணி கார் நிறுவனங்களின் கண்களை உறுத்தின.
மாருதி டிசையர் மார்க்கெட்டை குறிவைத்து புற்றீசல் போல பல புதிய காம்பேக்ட் ரக செடான் கார்கள் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன. ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், டாடா ஸெஸ்ட், ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா டிகோர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் அமியோ என பல கார்கள் வரிசை கட்டின.

மேலும், போலோ கார் அடிப்படையிலான அமியோ காரை இந்திய மார்க்கெட்டிற்காகவே ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியது. ஆனால், மாருதி டிசையர் மார்க்கெட்டை எந்த காரும் எதிர்பார்த்த அளவு அசைக்க முடியாத நிலை தொடர்கிறது. ஹோண்டா அமேஸ் கார் மட்டுமே ஓரளவு விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்ற நிலையை அடுத்து, அதன் விற்பனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எக்கனாமிக் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்த ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி குர்பிரதாப் போபராய் கூறுகையில்," அமியோ போன்று 4 மீட்டருக்கும் குறைவான மாடல்களை இனி உருவாக்க மாட்டோம். இது மிகவும் சிக்கலான ரகத்திலான தயாரிப்பு. இது முழுமையான செடான் கார் மாடலாக இருப்பது இல்லை," என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு சில மாற்றங்கள் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் அமியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அமியோ காரின் விற்பனையில் முன்னேற்றம் இல்லாமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.

இதையடுத்து, இந்த காரின் விற்பனையை நிறுத்துவதற்கு ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால், அதிக வர்த்தக வாய்ப்புள்ள செக்மென்ட்டில் இருந்து அமியோ காரை விலக்கிக் கொள்வது சரியான முடிவாக இருக்காது என்று ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர்.
காம்பேக்ட் செடான் கார்களில் மிகச் சிறந்த மாடல்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் அமியோ என்பதில் மாற்றுக் கருத்தில்லை. டிசைன், வசதிகள், சிறந்த எஞ்சின் ஆப்ஷன்கள் என இருந்தாலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இல்லை என்பதே இந்த கார் அஸ்தமனத்தை நோக்கி செல்வதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









