ஒரே மேடையில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய கார்கள் அறிமுகமாக வாய்ப்பு
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் என்ற பிரத்யேக நிகழ்ச்சியை முதல்முறையாக இந்தியாவில் நடத்துவதற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

உலகின் மிகவும் பிரபலமான ஜெனிவா, பிராங்க்ஃபர்ட், பாரிஸ் ஆகிய ஆட்டோமொபைல் கண்காட்சிக்கு முதல் நாள் இரவு ஃபோக்ஸ்வேகன் பிரத்யேக நிகழ்ச்சியை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த பிரத்யேக நிகழ்ச்சியில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் பல புதிய கார் மாடல்கள் வெளியிடப்படும்.

ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த நிகழ்ச்சி பத்திரிக்கையாளர்கள் மற்றும் கார் பிரியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆடி, பென்ட்லீ, போர்ஷே என ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் பல முன்னணி கார் பிராண்டுகளின் புதிய கார் மாடல்களை ஒரே இடத்தில் காண்பதற்கான பெரும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்து வருகின்றன.

இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் டெல்லி அருகே நொய்டாவில் நடக்க இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. முதல்முறையாக இந்தியாவில் இந்த நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியில், போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் கார், ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார், புதிய பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்களின் புதிய கான்செப்ட் கார் மாடல்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும்.

எனவே, முதல்முறையாக இந்தியாவில் நடக்க இருக்கும் ஃபோக்ஸ்வேகன் குரூப் நைட் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலைத் தூண்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் புதிய எஸ்யூவி மாடல்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்படும் புதிய கான்செப்ட் கார் மாடல்கள் வரும் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிகழ்ச்சி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

எனினும், விரைவில் இதற்கான அழைப்பு பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அப்போது இதுகுறித்த முழுமையானத் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








