விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி!
இந்த ஆண்டிலேயே ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புராஜெக்ட் 2.0 என்ற வர்த்தக திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, பல புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, முதல் மாடலாக ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி இந்த ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களின் வர்த்தகத்தை குறிவைத்து இந்த புதிய எஸ்யூவி மாடலை ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் களமிறக்க உள்ளது. எனினும், இது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட நீளம் குறைவான மாடலாக இருக்கும். எனினும், இந்த ரகத்தில் மிகவும் பிரிமீயமான மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

அதாவது, ரூ.17 லட்சம் முதல் ரூ.20 லட்சத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த எஸ்யூவி இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இறக்குமதி கார்களுக்கான புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இந்திய வாகன விதிகளுக்கு ஏற்ப எந்தவொரு மாறுதல்களும் செய்யாமல் கார், பைக்குகளை விற்பனை செய்ய இயலும். ஆனால், 2,500 யூனிட்டுகள் மட்டுமே இவ்வாறு விற்பனை செய்ய முடியும். அதன் அடிப்படையிலேயே இந்த எஸ்யூவி வர இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவியானது விற்பனை எண்ணிக்கையில் அடிப்படையில் வர்த்தக நோக்குடன் களமிறக்கப்படவில்லை என்றும், இந்தியாவில் தனது பிராண்டு மதிப்பை உயர்த்திக் கொள்ளும் எண்ணத்துடனே இந்த எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாடுகளில் மூன்று விதமான டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. 113 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழஹ்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டர்போ எஞ்சின் மற்றும் 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வெளிவரும் வாய்ப்புள்ளது. அதேபோன்று, டீசல் எஞ்சின் தேர்வை வழங்கும் வாய்ப்பும் ஃபோக்ஸ்வேகன் வசம் உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் டி-ராக் எஸ்யூவியின் வருகை ஒருவகையில் மகிழ்ச்சி தந்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி-க்ராஸ் காம்பேக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Source: Carandbike


Click it and Unblock the Notifications








