அதிசொகுசு வசதிகளுடன் 3 சீட்டர் மாடலில் வருகிறது வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி கார்!
வால்வோ எக்ஸ்சி90 சொகுசு எஸ்யூவி காரின் அதிக வசதிகள் நிரம்பிய பிரிமீயம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு எஸ்யூவி கார்களில் ஒன்றாக வாலவோ எக்ஸ்சி90 கார் பெயர் பெற்றிருக்கிறது. தற்போது இந்தியாவில் வால்வோ எக்ஸ்சி90 கார் மொமென்ட்டம், ஆர்-டிசைன், இன்ஸ்க்ரிப்ஷன் மற்றும் எக்சலென்ஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், முதல் மூன்று வேரியண்ட்டுகள் சாதாரண வகை சொகுசு வேரியண்ட்டுகளாகவும், எக்சலென்ஸ் வேரியண்ட் மிக அதிக சொகுசு வசதிகள் நிரம்பிய வேரியண்ட்டாகவும் விற்பனை செய்யப்படுகிரது. இந்த நிலையில், இந்திய கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் கனவை மெய்ப்பட வைக்கும் விதத்தில், வால்வோ எக்ஸ்சி90 காரின் உயர் சொகுசு மாடல் களமிறக்கப்பட இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி90 எக்சலென்ஸ் லான்ச் கன்சோல் என்ற புதிய வேரியண்ட் வரும் செப்டம்பர் 3ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வேரியண்ட் முற்றிலும் புதுமையான விதத்தில் 3 சீட்டர் மாடலாக வர இருக்கிறது.

ஆம், ஓட்டுனர் அருகிலுள்ள பயணி இருக்கை நீக்கப்பட்டு அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், கால் வைப்பதற்கான லெக் ரெஸ்ட் மற்றும் ஸ்டோரேஜ் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த காரில் பின்புறத்தில் இரண்டு கேப்டன் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த இருக்கைகள் மிக மிக சொகுசான அனுபவத்தை வழங்கும்.

இதன் பின்புற கேப்டன் இருக்கைகள் சாய்மான வசதி, குளிர்ச்சி மற்றும் காற்றோட்ட வசதியுடன் விசேஷ தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும். இந்தியாவின் அதி சொகுசு வசதிகளை வழங்கும் எஸ்யூவி மாடலாகவும் இருக்கும்.

நடுவில் பெரிய தடுப்பு மற்றும் அகலமான ஆர்ம் ரெஸ்ட் ஆகியவற்றுடன் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், பொழுதுபோக்கு திரைகளுடன் வர இருக்கிறது. அதாவது, பின் இருக்கையில் பயணிப்போர் அதி சொகுசான பயண அனுபவத்தை உணர முடியும்.

ஆர்ம் ரெஸ்ட்டில் கண்ணாடி மதுகோப்பைகளை வைக்கும் ஸ்டோரேஜ் வசதியும், சிறிய குளிர்சாதனப் பெட்டியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மடக்கி விரிக்கும் வசதியுடன் சிறிய அளவிலான டேபிள்களும் இடம்பெறுகின்றன.

புதிய வால்வோ எக்ஸ்சி90 காரின் எக்சலென்ஸ் வேரியண்ட்டானது கஸ்டமைஸ் செய்தது போன்ற பல்வேறு சொகுசு வசதிகளை பெற்றிருக்கிறது. அடிக்கடி வெளியூர் செல்லும் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களை இந்த கார் வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி காரில் ஹைப்ரிட் எரிபொருள் வகை மாடலாக வர இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் முன்சக்கரங்களுக்கும், மின் மோட்டார் பின்சக்ககரங்களுக்கும் பவரை செலுத்தும்.

இதன் பெட்ரோலோ் எஞ்சின் அதிகபட்சமாக 320 எச்பி பவரையும், மின் மோட்டார் 87 எச்பி பவரையும் வெளிப்படுத்தும். மொத்தமாக 407 எச்பி பவரையும், 640 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் சாதாரண எக்சலென்ஸ் வேரியண்ட்டைவிட இந்த புதிய எக்சலென்ஸ் லான்ச் கன்சோல் வேரியண்ட் அதிக விலை நிர்ணயிக்கப்படும். அதாவது, ரூ.1.40 கோடி முதல் ரூ.1.50 கோடி இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
Source: NDTV Auto


Click it and Unblock the Notifications








