ஊரடங்கிற்கு இடையிலும் சோதனை ஓட்டத்தில் 2020 மஹிந்திரா தார்...
மஹிந்திரா நிறுவனத்தில் அடுத்த தலைமுறை தார் மாடல் கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பு பணிகளில் மட்டுமில்லாமல் ஆட்டோமொபைல் துறையில் இதுவரை எந்த மாடலும் இல்லாத வகையில் சோதனை ஓட்டங்களிலும் பல வருடங்களாக இந்த கார் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், 2020 தார் மாடல் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுனில் எப்போது தளர்வு ஏற்படும் என மஹிந்திரா நிறுவனம் காத்திருந்தது போலும். ஏனெனில் கடந்த 3ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் சிறிய தளர்வு ஏற்பட்டவுடன் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் மேற்கொள்ளும் முதல் வேலை இதுதான்.

கொரோனா வைரஸினால் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவின் பெரும்பான்மையான அனைத்து சாலைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தயாரிப்பு மாடல்களின் சோதனை ஓட்டங்களும் முற்றிலுமாக தடைப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது இந்தியா கொரோனா ஊரடங்கில் மூன்றாவது நிலையில் உள்ளதால் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் குறைவான வேலை நேரத்துடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடலின் சோதனை ஓட்டம் மஹாராஷ்டிரா நாஷிக்கில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே நடத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலை பணிகள் மீண்டும் ஆரம்பிப்பதை பற்றி மஹிந்திரா நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ரஷ்லேன் தளத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்ட வீடியோ அதற்கான வேலைகள் துவங்கியுள்ளதை வெளிக்காட்டுகிறது.

இந்த வீடியோவில் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த புதிய தார், ஜீப் வ்ராங்க்லரின் டிசைன் அமைப்புடன் ஒத்திருக்கவில்லை என்று உறுதியாக சொல்ல முடியாது. அறிமுகத்திற்கு பிறகு புதிய தார் மாடல் ஃபோர்ஸ் குர்கா மாடலுடன் நேரடியாகவும், மாருதி சுசுகி ஜிம்னி மாடலுடன் ஒரு சில பிரிவுகளிலும் விற்பனையில் போட்டியிடும்.

ஜீப் வ்ராங்க்லர் மாடலை ஒத்து காணப்பட்டாலும் தார் மாடலின் இந்த புதிய தலைமுறை வெர்சன் அதன் முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலுமாக வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் இருந்து பெரும்பான்மையான பாகங்களை பெற்ற இதன் முந்தைய தலைமுறை தார் காரை போல் அல்லாமல் இந்த புதிய தலைமுறை மாடல் புதிய ப்ளாட்டாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மஹிந்திரா நிறுவனத்தின் பொறியியலாளர்கள் இந்த புதிய தார் மாடலை ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க முயற்சித்துள்ளனர். இந்நிறுவனம் 2020 தார் மாடலை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் என்ஜின் வேரியண்ட்கள் குறித்து வெளியாகியுள்ள தகவலில் இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட தார் மாடலில் இருந்த 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டாலியோன் டர்போ என்ஜின் தான் பொருத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 187 பிஎச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் என ஆட்டோ எக்ஸ்போவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் டீசல் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








