அறிமுகத்திற்கு முன்னரே இணையத்தில் கசிந்த ஃபோர்டு புரோன்கோ எஸ்யூவியின் புகைப்படம்... மலைத்துபோன ஜீப்!
ஃபோர்டு நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்ற புகழ்வாய்ந்த புரோன்கோ என்ற எஸ்யூவி காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஃபோர்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக புரோன்கோ இருக்கின்றது. இந்த எஸ்யூவி ரக கார் இன்னும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவில்லை. இருப்பினும், விரைவில் இந்த பிரமாண்ட எஸ்யூவி காரை ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் ஃபோர்டு தரப்பில் இருந்து வெளியிடப்பவில்லை.
இந்நிலையில், புரோன்கோவின் குழந்தை மாடலாக பிரசுரிக்கப்படும் புரோன்கோ ஸ்போர்ட் மாடலை உலகளாவிய வெளியீடாக ஃபோர்டு நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே புரோன்கோ ஸ்போர்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியிருக்கின்றன.
அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே காரின் புகைப்படங்கள் வெளியாகியிருப்பது அந்த காரின் மீதிருக்கும் ஆவலை மேலும் அதிகரிக்கச் செய்கின்ற வகையில் இருக்கின்றது.

இந்த புகைப்படங்கள் தற்போது புரோன்கோ சிக்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வாயிலாக வெளியாகியிருக்கின்றது. உலகம் முழுவதும் அதிக ஆர்வத்தை தூண்டியிருக்கும் கார்களில் புரோன்கோ எஸ்யூவி காரும் ஒன்று. இது, எப்போது அறிமுகமாகும் என்ற காத்திருப்பில் வாகன ஆர்வலர்கள் பலர் வழிமீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை ஃபோர்டு புரோன்கோ ஸ்போர்ட் தன்னுள் அடக்கியிருக்கின்றது.
தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் சற்றே குறைந்த தரத்தைக் கொண்டிருப்பதால் எங்களால் ஒரு சில அம்சங்களைப் பற்றி முழு உறுதியுடன் தெரிவிக்க முடியவில்லை. இருப்பினும், நம்பக்கூடிய சில தகவல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட அம்சங்கள் பற்றிய தகவலை மட்டும் இந்த தகவலில் வெளியிட்டிருக்கின்றோம்.
குறிப்பாக, ஃபோர்டு புரோன்கோவின் லுக் மற்றும் சில அடிப்படை அம்சங்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

2021 ஃபோர்டு புரோன்கோ மூன்று விதமான வடிவங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. அவை எஸ்டபிள்யூ, எல்டபிள்யூ மற்றும் ஸ்போர்ட் ஆகும். இதில், எஸ்டபிள்யூபி மற்றும் எல்டபிள்யூ ஆகிய இரண்டு மாடல்களும் அட்வென்சர் ரகத்திலும், ஸ்போர்ட் வேரியண்ட் அர்பன் எஸ்யூவி மாடலாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இத்துடன், ஆஃப்ரோடு அம்சங்களும் ஏராளமாக இந்த வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்காக, 2020 ஃபோர்டு எஸ்கேப் மாடலின் சில அம்சங்கள் இந்த காருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக, எஸ்கேப் மாடலின் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் ஈகோஸ்போர்ட் பெட்ரோல் மோட்டார் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 180 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த எஞ்ஜினில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸஸ் இணைக்கப்பட்டிருக்கின்றது. இது அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்கும்.

ஃபோர்டு புரோன்கோவின் வழக்கமான மாடலில் 2.3 லிட்டர் ஐ4 ஈகோபூஸ்ட் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அதீத திறனுடைய எஞ்ஜினைதான் மஸ்டாங் காரில் ஃபோர்டு பயன்படுத்துகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 310 பிஎச்பி மற்றும் 475 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.
இத்துடன், 2.7 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் எஞ்ஜினில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்ற தகவல் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது.
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த புரோன்கோ எஸ்யூவி ரக கார் குறிப்பாக ஜீப் நிறுவனத்தின் ஆஃப் ரோடு வாகனங்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த புரோன்கோ டைப்பிலான காரை ஃபோர்டு நிறுவனம் 60-ஸ் காலகட்டத்திலேயே அறிமுகம் செய்துவிட்டது. இதையடுத்து 1996ம் ஆண்டு சந்தையை விட்டு குறிப்பிட்ட காரணங்களுக்காக வெளியேற்றியது.

இதைத்தொடர்ந்து, மீண்டும் புரோன்கோவிற்கு உயிர் கொடுக்கும் உலகம் முழுவதும் ஆஃப்ரோடு வாகன சந்தையில் ஃபோர்டு நிறுவனம் களமிறக்க இருக்கின்றது. இதனாலயே உலகம் முழுவதும் இந்த புரோன்கோ எஸ்யூவி கார் மீது வாகன ஆர்வலர்களுக்கு அதிக ஆவல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த கார் அதிக எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றது. இதனை மேலும் அதிகரிக்கின்ற வகையில் அதன் ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
அதேசமயம், காட்சியாகியிருக்கும் ஃபோர்டு புரோன்கோ ஸ்போர்ட் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








