2021 ஹுண்டாய் ஐ30 என் காரின் டீசர் படங்கள் முதன்முறையாக வெளியீடு...
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 ஐ30என் மாடலின் டீசர் படங்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தெரியவந்துள்ள காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் ஐ30 மற்றும் ஐ30என் லைன் மாடல்களின் அப்டேட் வெர்சன்களை பற்றிய விபரங்களை வெளியிட்டு இருந்தது.

இதன்படி இவை பிராண்டின் புதிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜினை பெற்று வரவுள்ளதை அறிந்திருந்தோம். இதற்கிடையில் தான் தற்போது செயல்திறனை சார்ந்த ஐ30 என் மாடலின் டீசர் படங்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் காரை எந்தெந்த தொழிற்நுட்ப வசதிகளுடன் எதிர்பார்க்கலாம் என்ற தெளிவு நமக்கு கிடைத்துள்ளது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஐ30 என் தற்சமயம் விற்பனையில் இருக்கும் மாடலை காட்டிலும் பல விதங்களில் வேறுப்பட்டு காணப்படுகிறது.

இந்த டீசர் படங்கள் புதிய டிசைனில் முன் மற்றும் பின் பம்பர்கள், கம்பீரமான முன்பக்க க்ரில், புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் & டெயில்லேம்ப்கள், அப்கிரேடான பின் டிஃப்யூஸர், பெரிய எக்ஸாஸ்ட் அவுட்லெட்கள் மற்றும் 19-இன்ச்சில் புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை எவ்வாறு பொருத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக காட்டுகின்றன.

மற்றப்படி செயல்படுதிறனில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இதனால் வழக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை தான் புதிய ஐ30 என் மாடலும் பெற்றுவரும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் ஹூண்டாய் ஐ30-ல் 250 பிஎச்பி பவரையும், ஐ30 என்-ல் 275 பிஎச்பி பவரையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியது.

இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் புதியதாக தயாரிக்கப்பட்ட 8-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த ட்யூல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆனது என் செயல்திறன் மாற்று செயல்பாடுகளுக்கு உறுதியளிக்கிறது.

உடனுடக்குடன் பதிலையும் விரைவான ஆக்ஸலேரேஷனையும் வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ட்ரான்ஸ்மிஷன் முதலாவதாக ஐரோப்பிய சந்தைக்கு செல்லவுள்ளது. அதனை தொடர்ந்தே மற்ற நாட்டு சந்தைகளுக்கு இந்த கார் செல்லவுள்ளது.

தற்சமயம் விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐ30 என் மாடல் 0-வில் இருந்து 100 kmph என்ற வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடுகிறது. இருப்பினும் இதன் புதிய வெர்சன் இதனை காட்டிலும் விரைவாக இந்த வேகத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








