விரைவில் வெளிவருகிறது 2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்டின் விளம்பர வீடியோ!! ஸ்பை படங்கள் கசிந்தன
டிவிசி வீடியோவிற்கான படப்பிடிப்பில் இருந்து 2021 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் மாடலுக்கு அடுத்த ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்கவுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த வகையில் தற்போது மீண்டும் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் டிவிசி வீடியோவிற்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ டி வீர் லாக்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் 2021 ஜனவரி மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் டிவிசி (தொலைக்காட்சி கமர்ஷியல்) வீடியோ எந்த நேரத்திலும் அறிமுகமாகலாம் என்பதால், இந்த வீடியோவை நம்மால் நம்ப முடிகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான முதல் எம்ஜி மோட்டார் மாடலான ஹெக்டர், ஃபேஸ்லிஃப்ட் மாற்றங்களாக வெறும் காஸ்மெட்டிக் அப்கிரேட்களை மட்டுமே பெற்று வரவுள்ளது. அதிலும் பெரும்பான்மையான மாற்றங்கள் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் முன்பக்கத்தில் மட்டுமே இருக்கும்.

இந்த ஸ்பை படங்களில் காரின் முன்பக்க க்ரில் அமைப்பு கருப்பு மற்றும் சாடின் க்ரே நிற பார்டரை சுற்றிலும் கொண்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பின் பார்டர் ஹெட்லைட் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முன்பக்கத்தை தென் அமெரிக்காவில் செவ்ரோலெட் கேப்டிவா என்ற பெயரில் விற்பனையில் உள்ள ஹெக்டரின் ரீபேட்ஜ்டு வெர்சனை ஒத்து காணப்படுகிறது.

அலாய் சக்கரங்கள் 17 இன்ச்சிற்கு பதிலாக 18 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இவ்வளவு பெரிய அலாய் சக்கரங்கள் ஹெக்டருக்கு ஏற்றதாக இல்லை. பின்பக்கத்தில் இரு டெயில்லேம்ப்களை இணைக்கும் க்ரோம் லைன் புதிய கருப்பு நிற கார்னிஷ் உடன் வழங்கப்பட்டுள்ளது.

அதுவே தற்போதைய ஹெக்டரில் இந்த க்ரோம் ஸ்ட்ரிப் சிவப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது. இவை தவிர்த்து ஹெக்டரின் வெளிபுறத்தில் வேறெந்த டிங்கரிங் வேலைப்பாடும் மேற்கொள்ளப்படவில்லை. காரின் உட்புற ஸ்பை படங்கள் எதுவும் அதிகளவில் கிடைக்க பெறவில்லை.

கிடைத்துள்ள ஒரே ஒரு படத்தில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்புறம் ஹெக்டர் ப்ளஸை போல் வித்தியாசமான உள்ளமைவுடன் இரு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதலாக அப்டேட் செய்யப்பட்ட ஐ-ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி மற்றும் தன்னிச்சையாக டிம்-ஆகும் பின்பக்க பார்க்க உதவும் கண்ணாடி உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம்.

அதேபோல் 10.4 இன்ச்சில் செங்குத்தாக பொருத்தப்பட்ட தொடுத்திரை, பவர்டு டெயில்கேட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், இரு-கண்ணாடி பலகைகளுடன் சன்ரூஃப் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி போன்ற தற்போதைய ஹெக்டரில் வழங்கப்படும் வசதிகளையும் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே கூறியதுதான், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக தற்போதைய ஹெக்டரில் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டும்தான் கொண்டுவரப்படும். இதனால் வழக்கமான 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் தேர்வு 2021 ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் வழங்கப்படவுள்ளது.

அதேபோல் பெட்ரோல் என்ஜின் உடன் மைல்ட்-ஹைப்ரீட் அமைப்பும் வழங்கப்படும். இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் கூடுதல் தேர்வாக 6-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

டாடா ஹெரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கும் எம்ஜி ஹெக்டரின் 2021 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.12.84 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








