2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள 4 புதிய எஸ்யூவி கார்கள் இதோ!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சி தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து 4 எஸ்யூவிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள அந்த 4 எஸ்யூவிகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதில் முதல் எஸ்யூவியாக எம்ஜி இசட்எஸ் இவி கார் அறிமுகமாகவுள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு விற்பனையை இந்த கார் துவங்கவுள்ளது.

இசட்எஸ் இவி காரில் 44.5 kWH லித்தியம் பேட்டரியை கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரை எம்ஜி நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த மோட்டார் சிங்கிள் சார்ஜில் சுமார் 400 கிமீ தூரம் இயங்கும் வகையில் திறனை பெற்றுள்ளது.

இரண்டாவது எம்ஜி எஸ்யூவியாக சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பவ்ஜுன் ஆர்எஸ்-3 மாடலின் ரீ-பேட்ஜ்டு வெர்சன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகின்ற இந்த எஸ்யூவி கார் அறிமுகத்திற்கு பிறகு கியா செல்டோஸ் மாடலுடன் இந்திய சந்தையில் போட்டியிடவுள்ளது.

பவ்ஜுன் ஆர்எஸ்-3 காரானது 1.5 லிட்டர் பெட்ரொல் என்ஜினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 104 பிஎச்பி பவரையும் 135 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.

மூன்றாவது எம்ஜி எஸ்யூவி மாடலாக ஹெக்டர் ப்ளஸ் கார் இந்தாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் கேப்டன் இருக்கைகளை பெற்று அறிமுகமாகவுள்ள இந்த எஸ்யூவி கார் சமீபத்தில் கூட சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் வெளிவந்த தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

இந்த கார் தற்சமயம் விற்பனையாகி வரும் ஹெக்டர் எஸ்யூவியுடன் ஒப்பிடுகையில் முன்புற மற்றும் பின்புற டிசைன் மாற்றங்களுடன் அறிமுகமாகவுள்ளது. இருப்பினும் ஹெக்டர் மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினுடன் தான் இந்த கார் விற்பனையாகவுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இதன் டீசல் வேரியண்ட் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு இந்தியாவில் அறிமுகமானால் மேனுவல் கியர்பாக்ஸை மட்டும் தான் பெற்றிருக்கும்.

2020ல் அறிமுகமாகலாம் என கூறப்படுகின்ற நான்காவது எம்ஜி எஸ்யூவி கார், மேக்ஸஸ் டி90 மாடலின் ரீ-பேட்ஜ்டு வெர்சன். இந்த காரின் அறிமுகத்தை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம். முழு வடிவ எஸ்யூவியாக வெளியாகவுள்ள இந்த கார் அறிமுகத்திற்கு பிறகு ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 கார்களுடன் போட்டியிடவுள்ளது.

வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையாகி வரும் மேக்ஸஸ் டி90 எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 217 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஆற்றல் பெற்றது. இந்தியாவில் அறிமுகமாகும்போது இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளையும் எதிர்பார்க்கலாம்.

பொதுவாக இதுபோன்ற ஆட்டோ எக்ஸ்போக்களில் ஒன்று அல்லது இரண்டு புதிய மாடல்களை தான் எந்தவொரு நிறுவனமும் அறிமுகப்படுத்தும். ஆனால் எம்ஜி நிறுவனம் இவ்வாறு நான்கு எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எம்ஜி-ஐ போன்று வேறெந்த நிறுவனமாவது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டிற்கு மேற்பட்ட வாகனங்களை காட்சிப்படுத்தவுள்ளதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








